பெங்களூரு மேயர் தேர்தலில் காங். வேட்பாளர் கங்காம்பிகே வெற்றி பா.ஜனதா புறக்கணித்து வெளிநடப்பு


பெங்களூரு மேயர் தேர்தலில் காங். வேட்பாளர் கங்காம்பிகே வெற்றி பா.ஜனதா புறக்கணித்து வெளிநடப்பு
x
தினத்தந்தி 29 Sept 2018 5:00 AM IST (Updated: 29 Sept 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பெங்களூரு மேயராக காங்கிரசை சேர்ந்த கங்காம்பிகே தேர்வு செய்யப்பட்டார்.

பெங்களூரு, 

பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பெங்களூரு மேயராக காங்கிரசை சேர்ந்த கங்காம்பிகே தேர்வு செய்யப்பட்டார். துணை மேயர் தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கவுன்சிலர் ரமீளா வெற்றி பெற்றார். தேர்தலை புறக்கணித்து பா.ஜனதா வெளிநடப்பு செய்தது.

பெங்களூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் 28-ந் தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று அறிவிக் கப்பட்டது.

கடும் வாக்குவாதம்

அதன்படி பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள மன்ற அரங்கத்தில் நேற்று மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் ஜெயநகர் வார்டு கவுன்சிலர் கங்காம்பிகேவும், பா.ஜனதா சார்பில் பத்மநாபநகர் வார்டு கவுன்சிலர் ஷோபாவும், துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ) சார்பில் காவேரிபுரா வார்டு கவுன்சிலர் ரமீளா, பா.ஜனதா சார்பில் தர்மராயசாமி கோவில் வார்டு கவுன்சிலர் பிரதீபா தன்ராஜ் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து தேர்தல் நடைபெற்ற மன்ற அரங்கத்தில் கவுன்சிலர்கள் உள்பட வாக்காளர்கள் அனைவரும் கூடினர்.

தேர்தல் நடத்தும் பணிகளை மண்டல கமிஷனரான சிவயோகி கலசத் காலை 11.30 மணிக்கு தொடங்கினார். அப்போது பா.ஜனதா வரிசையில் அமர்ந்திருந்த சுயேச்சை கவுன்சிலர் ஆனந்தகுமாரை காங்கிரசார் வலுக்கட்டாயமாக தங்கள் பகுதிக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். ஆனால் பா.ஜனதாவினர் அதை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. லேசான தள்ளுமுள்ளுவும் நடந்தது. இதனால் சபையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தேர்தல் பணிகள் தேசிய கீதத்துடன் தொடங்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதும், கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபடி இருந்தனர்.

மோதல் ஏற்படும் நிலை

வாக்காளர்கள் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்தபடியே இருந்தார். ஆனால் அதை காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினர் பொருட்படுத்தவில்லை. அதே போல் பா.ஜனதா வசம் இருந்த சுயேச்சை கவுன்சிலர் ரமேசும் வலுக்கட்டாயமாக காங்கிரஸ் வரிசையில் அமர வைக்கப்பட்டார். ஆனால் அவரே அதை விரும்பாத போதும், காங்கிரசார் அவரை விடவில்லை. அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் நிலை உருவானது. சிலர் இருக்கை மீது ஏறி நின்று குரலை உயர்த்தி பேசினர். இதனால் சபையில் கூச்சல்- குழப்பம் உண்டானது. சிறிது நேரத்திற்கு பிறகு அமைதி திரும்பியது.

அதே நேரத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் மஞ்சுளா நாராயணசாமி, தேவதாஸ் ஆகிய 2 பேரும், பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். இது காங்கிரஸ் கூட்டணியினரை ஆதங்கப்பட வைத்தது. தங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று பா.ஜனதாவினர் கைகளை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். இதனால் காங்கிரசாரின் முகத்தில் சற்று மகிழ்ச்சி குறைந்து காணப்பட்டது. இதனால் சபையில் நிலவிய பரபரப்பு மேலும் அதிகரித்தது.

தாழ் போடப்பட்டது

இந்த நிலையில் தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் வாக்காளர்களின் வருகை பதிவு செய்யும் பணி தொடங்கியது. தேர்தல் ஊழியர்கள் வருகை பதிவேட்டை வாக்காளர்களின் இருக்கைக்கே கொண்டு சென்று, கையெழுத்து பெற்றனர். வருகை பதிவை எடுக்கும் பணி முடிவடைந்ததும், அந்த அரங்க கதவுகளை மூடும்படி தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி அரங்கு கதவுகள் மூடப்பட்டு, உட்பக்கமாக தாழ் போடப்பட்டது.

இனி வாக்காளர்கள் வந்தால், உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். ஒருவேளை உள்ளே வந்தாலும், அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என்று தேர்தல் அதிகாரி கூறினார். வாக்காளர்களின் வருகை குறித்த விவரங்களை தேர்தல் அதிகாரி அறிவித்தார். மொத்தம் உள்ள 259 வாக்காளர்களில் 253 பேர் ஆஜராகி இருப்பதாக கூறினார். வாக்காளர்கள் ரோஷன் பெய்க், ஆஷா சுரேஷ், லலிதா திம்மனஞ்சய்யா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அனந்தகுமார், கவுன்சிலர் நதீம்கான் ஆகிய 6 பேர் ஆஜராகவில்லை என்று தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

பா.ஜனதா கடும் எதிர்ப்பு

அதைத்தொடர்ந்து ஓட்டுப்பதிவு பணிகள் தொடங்கின. அதற்கு முன்பாக, ஜெய்ராம் ரமேஷ், ரகு ஆச்சார், மனோகர், உக்ரப்பா ஆகிய 4 பேரின் ஓட்டுரிமையை ரத்து செய்யக் கோரிய எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டியின் மனுவை நிராகரிப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதை காங்கிரஸ் வாக்காளர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். அதே நேரத்தில் இதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மத்திய மந்திரி சதானந்த கவுடா உள்பட பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி னர். தேர்தல் அதிகாரிகள் காங்கிரசுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி கோஷங்களை எழுப்பினர். காங்கிரசை கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். அதைத்தொடர்ந்து பா.ஜனதா உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணித்து, சபையில் இருந்து வெளிநடப்பு செய்து வெளியேறினர். அவர்களுடன் சுயேச்சை கவுன்சிலர் ரமேசும் வெளியேறினார். காங்கிரசை சேர்ந்த கவுன்சிலர் மமதா சரவணன் நேற்று திடீரென்று பா.ஜனதா பக்கம் சாய்ந்தார். அவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். வெளிநடப்பால் பா.ஜனதா வரிசைகளில் இருக்கைகள் காலியாக இருந்தன.

130 ஓட்டுகள் கிடைத்தன

அதைத்தொடர்ந்து முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் கங்காம்பிகேவும், துணை மேயர் பதவிக்கு ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிட்ட ரமீளாவும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மேயர் கங்காம்பிகேவுக்கு 130 ஓட்டுகளும், துணை மேயர் ரமீளாவுக்கு 129 வாக்குகளும் விழுந்தன. பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மஞ்சுளா நாராயணசாமி, காங்கிரசுக்கு மட்டும் வாக்களித்துவிட்டு, சபையில் இருந்து வெளியேறினார். இதனால் துணை மேயருக்கு ஒரு ஓட்டு குறைவாக கிடைத்தது.

புதிய மேயர் மற்றும் துணை மேயருக்கு தேர்தல் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட மந்திரிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதிய மேயர் கங்காம்பிகேவிடம் வெள்ளியால் செய்யப்பட்ட கெம்பேகவுடா சிலை, ஒரு பெட்டி, மேயருக்குரிய பொருட்கள் வழங்கப்பட்டன. கங்காம்பிகே, பெங்களூரு மாநகராட்சியின் 52-வது மேயர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மத்திய மந்திரி

சதானந்தகவுடா

இந்த தேர்தலில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, மாநில மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், கிருஷ்ண பைரேகவுடா, ஜெயமாலா, எம்.பி.க்கள் ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ்கவுடா, ராமமூர்த்தி, ஹனுமந்தய்யா, டி.கே.சுரேஷ், பி.சி.மோகன் மற்றும் பெங்களூரு நகரில் உள்ள 28 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள், நகரில் வசிக்கும் எம்.எல்.சி.க்கள் கலந்துகொண்டனர்.

இதையொட்டி மாநகராட்சி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Next Story