அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே போதையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது


அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே போதையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2018 4:15 AM IST (Updated: 29 Sept 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே பட்டாக்கத்தியுடன் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி,

ஆவடி அடுத்த அண்ணனூர் அந்தோணி நகரை சேர்ந்தவர் மன்னார். இவருடைய மகன் ரஞ்சித் (வயது 20). திருநின்றவூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஞ்சித்தும், அவருடைய நண்பர் விஷால் என்பவரும் குடிபோதையில் நேற்று மாலை அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே பட்டாக்கத்தியுடன் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கைது

இதுகுறித்து பொதுமக்கள் திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார், பட்டாகத்தியுடன் ரகளையில் ஈடுபட்டிருந்த ரஞ்சித்தை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

அவர் மீது வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரஞ்சித்துடன் இருந்த விஷாலை போலீ சார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே வெட்டப்பட்டவர்

இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆவடி பஸ் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநில கல்லூரி மாணவரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் தனியார் கல்லூரி மாணவர்கள் பட்டாகத்தியுடன் அண்ணனூர் ரெயில் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி 15-ந் தேதி ரஞ்சித் தேர்வு எழுத சென்றபோது திருநின்றவூரில் கல்லூரிக்கு முன்பு மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையில் மாணவர்கள் சிலர் ரஞ்சித்தை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தலையில் வெட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story