சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு நடிகை ஜெயமாலா வரவேற்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் சென்றதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் சென்றதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ஜெயமாலா, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்று உள்ளார்.
பெங்களூரு,
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் சென்றதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ஜெயமாலா, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்று உள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய ஜெயமாலா
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதி கிடையாது. இந்த நிலையில் இந்த நடைமுறைக்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து வயது பெண்களும் அய்யப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என்று கூறி இருக்கும் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.
அப்படி வரவேற்று இருப்பவர்களில் பிரபல கன்னட நடிகை ஜெயமாலாவும் ஒருவர். இவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் தான் சென்றதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயமாலா இப்போது கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள மதசார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக இருக்கிறார்.
தேவபிரசன்னம்
கேரளாவில் உள்ள கோவில்களில் முக்கிய மாற்றங்கள் அல்லது பராமரிப்பு பணிகள் போன்றவை செய்ய வேண்டும் என்றால் கடவுளிடம் அதற்காக அனுமதி கேட்கும் வகையில் தேவபிரசன்னம் என்ற பூஜை நடத்தப்படும். இப்படி கடந்த 2006-ம் ஆண்டு உண்ணிகிருஷ்ண பணிக்கர் தலைமையில் தேவபிரசன்னம் பார்த்த போது, சபரிமலை அய்யப்பன் கோவிலில் இளம்பெண் ஒருவர் சாமி சிலையை தொட்டுவிட்டதாகவும் இதனால் சாமி கோபத்தில் இருப்பதாகவும், இந்த களங்கத்தை போக்கவேண்டுமானால் பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதி இல்லாத போது, ஒரு பெண் எப்படி சாமி சிலையை தொடமுடியும் என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அப்போது பிரபல கன்னட நடிகை ஜெயமாலா, 1987-ம் ஆண்டு தனக்கு 28 வயதாக இருந்த போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றதாகவும், அப்போது மூலஸ்தானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய போது தடுமாறி கீழே விழுந்ததாகவும் அந்த சமயத்தில் மூல விக்கிரகத்தில் தனது கை பட்டுவிட்டதாகவும் கூறினார். இந்த தகவலை கோவில் நிர்வாகத்துக்கு அவர் ‘பேக்ஸ்’ மூலம் அனுப்பிவைத்தார்.
கட்டுக்கதை
பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், அய்யப்பன் கோவிலுக்குள் சென்றதாகவும், சிலையை தொட்டதாகவும் நடிகை ஜெயமாலா கூறியது முழுக்க முழுக்க கட்டுக்கதை என்றும், அவருக்கும் பணிக்கருக்கும் நீண்ட நாள் பழக்கம் இருந்ததும், அவர் சொன்னபடியே ஜெயமாலா அவ்வாறு கூறியதாகவும் தெரியவந்தது. சபரிமலை கோவிலின் தந்திரி மற்றும் அவரது குடும்பத்தின் நற்பெயரை கெடுக்கவே பணிக்கரும், ஜெயமாலாவும் சேர்ந்து இப்படி நாடகமாடியதும் அம்பலமானது.
பின்னர் இது தொடர்பாக ஜெயமாலா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அந்த வழக்கின் தீர்ப்பு ஜெயமாலாவுக்கு சாதகமாக அமைந்ததால் அந்த விவகாரம் அத்துடன் ஓய்ந்தது.
வரவேற்பு
இந்த நிலையில் இப்போது, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி இருக்கிறது. இதை ஜெயமாலா வரவேற்று உள்ளார்.
அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதுபோன்ற ஒரு தீர்ப்பைத்தான் நான் எதிர்பார்த்தேன். பெண்களுக்கு இப்போது நீதி கிடைத்து உள்ளது. இதை இந்த தேசத்தின் சட்ட நடைமுறைக்கும், அரசியல் சாசனத்துக்கும் கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். என்னுடைய வாழ்க்கையில் இதை விட மகிழ்ச்சியான தருணம் வேறு எதுவும் இல்லை. பெண்கள் சமுதாயத்துக்கும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், கடவுள் மற்றும் அரசியல் சாசனத்தை எழுதிய அம்பேத்கருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடவுள் மீதும், நீதித்துறையின் மீதும் நான் மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
இவ்வாறு ஜெயமாலா கூறினார்.
Related Tags :
Next Story