தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமத்துக்கு ரூ.10 லட்சம்: கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்
தீண்டாமை கடைப்பிடிக்காத ஒரு கிராமத்துக்கு ரூ.10 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது என திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு குறித்து கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு எதிராக நிகழும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்காக குடியியல் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் சென்னையை தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் தீண்டாமையை கடைப்பிடிக்காமல் நல்லிணக்கத்துடன் உள்ள ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு. அந்த கிராமத்திற்கு ரூ.10 லட்சம் தமிழக அரசால் நிதி வழங்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
முன்னதாக வன்கொடுமை தொடர்பாக விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிப்பு குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், கூடுதல் சூப்பிரண்டு ஜான்ஜோசப், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் இருதயராஜ், உதவி இயக்குனர் குற்றவியல் வக்கீல் அம்சவேணி, வன்கொடுமை தடுப்பு தொடர்பான வழக்குகளின் அரசு வக்கீல் அர்ச்சுணன் மற்றும் வன்கொடுமை தடுப்பு கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story