குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்வேன் புதிய மேயர் கங்காம்பிகே பேட்டி


குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்வேன் புதிய மேயர் கங்காம்பிகே பேட்டி
x
தினத்தந்தி 29 Sept 2018 4:00 AM IST (Updated: 29 Sept 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்வேன் என்று புதிய மேயர் கங்காம்பிகே கூறினார்.

பெங்களூரு, 

குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்வேன் என்று புதிய மேயர் கங்காம்பிகே கூறினார்.

பெங்களூரு புதிய மேயராக பொறுப்பேற்ற பிறகு கங்காம்பிகே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குப்பை பிரச்சினைக்கு...

பெங்களூரு நகரில் சுற்றுச்சூழல், மக்களின் உடல் ஆரோக்கியத்தை காப்பது, சாக்கடை கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஐகோர்ட்டு உத்தரவுப்படி நகரில் சாலை குழிகள் மூடப்பட்டு வருகின்றன. அந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள நான் நடவடிக்கை எடுப்பேன்.

ஐகோர்ட்டு தலையிடும் வரை அமைதியாக இருக்காமல், நான் சிறப்பான முறையில் செயல்பட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்வேன். குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்வேன். பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குடும்பமாக பணியாற்றுவோம்

பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், எந்த பணிகளையும் செம்மையாக செய்ய முடியாது. நகரின் முன்னேற்றத்திற்காக நான் உள்பட 198 கவுன்சிலர்களும் ஒரு குடும்பமாக பணியாற்றுவோம். தேர்தலில் மட்டுமே நாங்கள் எதிரெதிராக இருப்போம். தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் ஒரு குடும்பமாக பணியாற்றுவோம். கவுன்சிலர்களின் அதிகாரத்தை பாதுகாப்போம். இந்த விஷயத்தில் சபையில் விவாதித்து முடிவு எடுப்போம்.

மாநகராட்சியின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்னை மேயராக்கிய துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்பட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மேயர் கங்காம்பிகே கூறினார்.

Next Story