அண்ணன்-தம்பியை கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு


அண்ணன்-தம்பியை கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Sep 2018 11:00 PM GMT (Updated: 28 Sep 2018 10:32 PM GMT)

முன்விரோத தகராறில் அண்ணன்- தம்பியை கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி அருகில் உள்ள மேல்சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது தம்பி கமலக்கண்ணன். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தனபாக்கியம் என்பவரிடம் இருந்து ½ ஏக்கர் நிலத்தை வெள்ளையன் குடும்பத்தினர் வாங்கி உள்ளனர்.

இந்த நிலத்தின் வழியாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்து செல்வது வழக்கம். இதற்கு வெள்ளையன் குடும்பத்தினர் ஆட்சேபனை தெரிவித்து, அங்கு வீடு கட்ட அஸ்திவாரம் போட்டனர். இதனால் ஊர் பொதுமக்களுக்கும், வெள்ளையன் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. வெள்ளையன் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கோர்ட்டு உத்தரவின்படி வெள்ளையன் வீடு கட்டுவதை நிறுத்தினார். மேலும் அந்த நிலத்தின் வழியாக பிணத்தை எடுத்து செல்லவும் தடுத்துள்ளார். இதனால் வெள்ளையன் குடும்பத்தினருக்கும், மேல்சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 33), முருகன் (30), பிச்சாண்டி (43), பச்சைமுத்து (42), வெங்கடாசலம் (75), மணி (57), அருணகிரி (23), மஞ்சுநாதன் (24), சம்பத் (39), முருகன் (42), சுப்பிரமணி (50), பாலகிருஷ்ணன் (28), முருகன் (32) ஆகிய 13 பேரும் சேர்ந்து வெள்ளையன் மற்றும் அவரது தம்பி கமலக்கண்ணன் ஆகியோரை தாக்கி உள்ளனர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து வெள்ளையனின் மகன் சந்திரநாதன் கொடுத்த புகாரின் பேரில் கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, 13 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு கூறினார்.

அதில், ஏழுமலை, முருகன், பிச்சாண்டி. பச்சைமுத்து, மஞ்சுநாதன், சம்பத் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் அருணகிரி என்பவர் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து போலீசார் தண்டனை பெற்ற 6 பேரையும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.


Next Story