பிரபல நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளில் தண்ணீர் கலந்து விற்ற கும்பல் சிக்கியது 1,075 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்
பிரபல நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளில் தண்ணீர் கலந்து விற்பனை செய்து வந்த கும்பலினர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
பிரபல நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளில் தண்ணீர் கலந்து விற்பனை செய்து வந்த கும்பலினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலீசார் 1,075 லிட்டர் கலப்பட பாலை பறிமுதல் செய்து உள்ளனர்.
பாலில் கலப்படம்
மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் ஒரு கும்பலினர் கலப்பட பால் தயாரித்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார், உணவு மற்றும் மருந்து துறை அதிகாரிகளுடன் சாந்தாகுருஸ், சுபாஷ் நகர் பகுதியில் உள்ள 2 வீட்டில் சம்பவத்தன்று காலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலில் தண்ணீர் கலந்து விற்பனைக்கு அனுப்பப்படுவது தெரியவந்தது.
போலீசாரின் சோதனையில், கும்பலினர் பிரபல நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை வெட்டி அதில் இருந்து பாதி பாலை வெளியே எடுக்கின்றனர். பின்னர் அதில் தண்ணீரை கலந்து மெழுகுவர்த்தி மூலம் பால் பாக்கெட்டை ஒட்டுகின்றனர். இதேபோல பாக்கெட்டுகளில் இருந்து எடுத்த பாலில் தண்ணீரை கலந்து மீண்டும் அதை வேறு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
4 பேர் கைது
இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் இருந்த 1,075 லிட்டர் கலப்பட பாலை பறிமுதல் செய்தனர். இதேபோல போலீசார் அங்கு இருந்து பிரபல நிறுவனங்களின் 63 ஆயிரம் காலி பால் பாக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போலீசார் பாலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்து வந்த பரசுராம் (வயது 36), கிருஷ்ணா (29), நாகராஜ் (22), லெட்சுமி (40) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் கலப்பட பால் தயாரித்த கும்பலுக்கு பிரபல பால் நிறுவனங்களின் பாக்கெட்டுகளை வினியோகித்த 2 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story