‘ஆன்-லைன்’ விற்பனையை கண்டித்து மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்


‘ஆன்-லைன்’ விற்பனையை கண்டித்து மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2018 4:42 AM IST (Updated: 29 Sept 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் ‘ஆன்-லைன்’ மருந்து விற்பனையை கண்டித்து மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

நாகரிக வளர்ச்சியின் காரணமாக தற்போது துணிகள், செல்போன், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆன்-லைனில் பதிவு செய்து பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். இதன் மூலம் கடை வைத்து பிழைப்பு நடத்தும் வணிகர்கள், சிறு-குறு வியாபாரிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனையும் நடப்பதால் கருக்கலைப்பு மாத்திரை உள்ளிட்டவை எளிதில் கிடைப்பதாகவும், இது சமுதாய சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி அதனை தடை செய்யக்கோரி மருந்து வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் ஆன்-லைன் மருந்து வணிகத்தை தடை செய்யக்கோரி செப்டம்பர் 28-ந் தேதி (அதாவது நேற்று) கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்து இருந்தனர். அந்த வகையில் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் மாவட்டத்திலுள்ள 550 மருந்து கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. இதனால் காய்ச்சல், தலைவலி, உடற்காயங்களுக்கான மருந்து உள்ளிட்டவற்றை வாங்க முடியாமல் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். சிலர் கரூர் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருந்துகளை பெற்று சென்றதையும் காண முடிந்தது. மாலை 6 மணிக்கு மேல் மருந்து கடைகள் திறந்ததும் அங்கு கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது. அப்போது ஆன்லைன் மருந்து வர்த்தகத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்களை வாடிக்கையாளர்களிடம் மருந்து வணிகர்கள் கொடுத்தனர்.

முன்னதாக கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் நல சங்கத்தினர் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விமலா திருஞானம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, மருந்துகளை ஆன்- லைனில் வாங்கும் போது அது சேதமடைந்து இருந்தாலோ, மருந்தின் ஆயுட்காலம் முடிவுற்றிருந்தது தெரிய வந்தாலோ மீண்டும் அதனை கொடுத்து விட்டு பணத்தை திரும்ப பெற இயலாது. ஆனால் கடைகளில் நேரடியாக சென்று மருந்து வாங்கும் போது விசாரித்து உரிய ஆலோசனையின் பேரில் பெற இயலும். எனவே ஆன்-லைன் மருந்து வணிகத்தை தடை செய்ய வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் பேசினர். இதில் சங்க ஆலோசகர் மேலை பழனியப்பன், பொருளாளர் பாலமுருகன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story