பணம் திருடியதாக தாய் கண்டிப்பு: தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் கிணற்றுக்குள் உயிருக்கு போராட்டம்


பணம் திருடியதாக தாய் கண்டிப்பு: தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் கிணற்றுக்குள் உயிருக்கு போராட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2018 4:59 AM IST (Updated: 29 Sept 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே பணம் திருடியதாக தாய் கண்டித்ததால் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். காயங்களுடன் உயிருக்கு போராடிய அவர் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டார்.

ராஜாக்கமங்கலம்,

தாய் கண்டித்ததால் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே எறும்புக்காடு பழவிளை பகுதியில் சாலையோரத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்து கிணற்றின் அருகில் ஒரு இளம்பெண்ணின் செருப்பு கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அருகில் சென்று பார்த்த போது, கிணற்றில் மயங்கிய நிலையில் படுகாயங்களுடன் ஒரு இளம்பெண் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீசாரும், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் படுகாயங்களுடன் கிடந்த இளம்பெண்ணை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் கடந்த 2 நாட்களாக கிணற்றுக்குள் உயிருக்கு போராடியதாக பரபரப்பு தகவல் வெளியானது. கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண், ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

அந்த இளம்பெண் தனது வீட்டில் பணம் திருடியதாகவும், இதனை அவருடைய தாயார் கண்டித்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 26-ந் தேதி காலையில் வழக்கம்போல் இளம்பெண் வேலைக்கு சென்றார். சிறிது நேரத்தில் மகள் வேலை பார்க்கும் கடைக்கு சென்ற தாயார், அங்கு மற்றவர்கள் முன்பு பணம் திருடியது தொடர்பாக மீண்டும் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த இளம்பெண் மாலை வீடு திரும்பாமல், பழவிளையில் உள்ள தோட்டத்து கிணற்றில் தற்கொலை செய்து கொள்வதற்காக குதித்துள்ளார். கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் சேற்றில் சிக்கி படுகாயங்களுடன் மயங்கி கிடந்துள்ளார். சம்பந்தப்பட்ட கிணறு உள்ள பகுதிக்கு யாரும் செல்வது கிடையாது. இதனால் அந்த கிணற்றுக்குள் விழுந்த பெண்ணை யாரும் கவனிக்க வாய்ப்பு இல்லாததால், அவர் அங்கேயே 2 நாட்களாக உயிருக்கு போராடியுள்ளார்.கிணற்றின் அருகில் கிடந்த செருப்பை பார்த்து தான் சிலர் கிணற்றை எட்டி பார்த்துள்ளனர். அப்போது தான் கிணற்றுக்குள் இளம்பெண் கிடந்தது தெரியவந்தது. அதன்பிறகு அவர் மீட்கப்பட்டார்.

2 நாட்களாக கிணற்றில் உயிருக்கு போராடிய பெண் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story