ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு: குமரியில் 500 மருந்து கடைகள் அடைப்பு


ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு: குமரியில் 500 மருந்து கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 28 Sep 2018 11:33 PM GMT (Updated: 28 Sep 2018 11:33 PM GMT)

ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் நேற்று 500 மருந்து கடைகள் மூடப்பட்டன.

நாகர்கோவில்,

ஆன்லைன் வர்த்தகத்துக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் மருந்துகள் விற்பனையையும் ஆன்லைன் மூலம் நடத்த முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் இதற்கு மருந்து கடை உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆன்லைன் விற்பனை வந்து விட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள். மேலும் ஆன்லைன் விற்பனை மூலம் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே பொதுமக்கள் மருந்துகளை பெற முடியும். இதனால் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெற வாய்ப்புகள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டையும் மருந்து வியாபாரிகள் வைத்துள்ளனர்.

எனவே ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மருந்து கடை உரிமையாளர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல குமரி மாவட்டத்திலும் மருந்து கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மருந்து கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து நேற்று இரவு 12 மணி வரை இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மருந்து கடை உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.

இதுபற்றி குமரி மாவட்ட மருந்து மொத்த மற்றும் சில்லரை வியாபார சங்க பொருளாளர் சதீஸ் என்பவரிடம் கேட்டபோது, “மருந்து விற்பனையை ஆன்லைன் மூலமாக நடத்தினால் எங்களை போன்று கடை வைத்திருப்பவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தற்போது ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். குமரி மாவட்டத்தில் சுமார் 500 மருந்து கடைகள் உள்ளன. நாகர்கோவிலில் மட்டும் சுமார் 100 மருந்து கடைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் மூடி எங்களது எதிர்ப்பை மத்திய அரசுக்கு காட்டி இருக்கிறோம். மேலும் எங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கும் வரை போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க பொது செயலாளர் கே.கே.செல்வன் தலைமை தாங்கினார். இதில் திரளான மருந்து கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது கே.கே.செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசு ‘ஆன்-லைன்’ முறையில் மருந்து விற்பனை செய்வதற்காக முடிவை எடுத்துள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான வர்த்தகம் பதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த முடிவை மாற்றம் செய்யவில்லை என்றால் வரும் டிசம்பர் மாதம் 3 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் போராட்டங்களை தொடருவோம் என்றார்.



Next Story