பாறைகளை வெடி வைத்து தகர்க்க தடை விதித்தது கண்துடைப்பு நாடகம் கே.ஆர்.எஸ். அணை பகுதியில் கல்குவாரிகள் செயல்பட தடை


பாறைகளை வெடி வைத்து தகர்க்க தடை விதித்தது கண்துடைப்பு நாடகம் கே.ஆர்.எஸ். அணை பகுதியில் கல்குவாரிகள் செயல்பட தடை
x
தினத்தந்தி 30 Sept 2018 4:30 AM IST (Updated: 29 Sept 2018 11:43 PM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.எஸ். அணை பகுதியில் பாறைகளை வெடிவைத்து தகர்க்க தடை விதித்தது கண்துடைப்பு நாடகம் என்றும், அணை பகுதியில் உள்ள கல்குவாரிகள் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மண்டியா, 

கே.ஆர்.எஸ். அணை பகுதியில் பாறைகளை வெடிவைத்து தகர்க்க தடை விதித்தது கண்துடைப்பு நாடகம் என்றும், அணை பகுதியில் உள்ள கல்குவாரிகள் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கே.ஆர்.எஸ். அணைக்கு ஆபத்து

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை உள்ளது. இந்த அணை தமிழகம், கர்நாடக மாநில குடிநீர், பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் இருமாநில மக்களின் முக்கிய ஜீவஆதாரமாக கே.ஆர்.எஸ். அணை திகழ்கிறது. சமீப காலமாக கே.ஆர்.எஸ். அணை அருகே சில கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் வெடிமருந்துகளை பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் நிலஅதிர்வும் ஏற்படுகிறது.

இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைதொடர்ந்து கர்நாடக இயற்கை பேரழிவு மையம் கே.ஆர்.எஸ். அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கே.ஆர்.எஸ். அணை அருகே பேபி பெட்டா பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருவதால், நில அதிர்வு, ஒலி மாசு அதிகளவில் ஏற்படுவது தெரியவந்தது. இந்த அறிக்கை மாவட்ட கலெக்டர் மஞ்சுஸ்ரீயிடம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தடையை மீறி இயங்கும் கல்குவாரிகள்

இதையடுத்து கே.ஆர்.எஸ். அணை பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கல்குவாரிகளில் வெடிமருந்துகளை பயன்படுத்தி பாறைகளை தகர்த்து எடுக்க தடை விதித்து கலெக்டர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதாவது, மாலிகெரே, அலப்பஹள்ளி, பிண்டஹள்ளி, பேபி, பேபி பேட்டா, காவலு, கனிவேகொப்பலு, ராகிமுட்டனஹள்ளி, காட்டேரி, மல்லேனஹள்ளி, சந்திரே, பாண்டவபுரா, ஒசபன்னங்காடி, சின்னகுரளி, ஒனகானஹள்ளி, கானகானஹள்ளி, நுகுஹள்ளி, கானகானமாரடி, காமநாயக்கனஹள்ளி, மால்கோனஹள்ளி, காஞ்சனஹள்ளி, டிங்கா, நீலனகொப்பாலு ஆகிய பகுதிகளில் கல்குவாரிகளில் வெடிமருந்துகளை பயன்படுத்தி பாறைகளை தகர்க்க அடுத்த மாதம் (அக்டோபர்) 26-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை மீறியும் கே.ஆர்.எஸ். அணை பகுதியில் கல்குவாரிகளில் பாறைகளை வெடிமருந்துகளை பயன்படுத்தி தகர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கண்துடைப்பு நாடகம்

இதுகுறித்து கர்நாடக விவசாயிகள் சங்கம் (கே.ஆர்.ஆர்.எஸ்.) நிர்வாகிகள் கூறியதாவது:-

‘கல்குவாரிகளால் கே.ஆர்.எஸ். அணைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் கல்குவாரிகளில் வெடிமருந்துகளை பயன்படுத்தி பாறைகளை தகர்த்து எடுக்க மட்டும் தடை விதித்துள்ளது. இது ஒரு கண்துடைப்பு நாடகம்.

கே.ஆர்.எஸ். அணையை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கல்குவாரிகள் இயங்கவும் தடை விதிக்க வேண்டும். தடையை மீறி கல்குவாரிகளில் வெடிமருந்துகளை பயன் படுத்தி பாறைகளை தொடர்ந்து தகர்த்து எடுத்து வருகிறார்கள். அத்தகைய கல்குவாரி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அணை பகுதியில் உள்ள கல்குவாரிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும்‘.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போராட்டம் நடத்துவோம்

இதுகுறித்து மறைந்த விவசாய சங்கத் தலைவரான கே.எஸ்.புட்டண்ணய்யாவின் மனைவி சுனிதா கூறுகையில், பாண்டவபுரா பகுதிகளில் கல்குவாரிகளை மூட உத்தரவிட வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

Next Story