கார் கவிழ்ந்த விபத்தில் கையில் எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நடிகர் தர்ஷன் வீடு திரும்பினார்
கார் கவிழ்ந்த விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தர்ஷன் நேற்று வீடு திரும்பினார்.
மைசூரு,
கார் கவிழ்ந்த விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தர்ஷன் நேற்று வீடு திரும்பினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், இரண்டு மாத ஓய்வுக்கு பிறகு படப்பிடிப்புகளில் பங்கேற்பேன் என்று தெரிவித்தார்.
விபத்தில் நடிகர் தர்ஷன் காயம்
கன்னட திரைப்பட உலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் நடிகர்கள் தேவராஜ், பிரஜ்வல் தேவராஜ் உள்பட 5 பேர் கடந்த 24-ந்தேதி மைசூருவில் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு காரில் சென்றனர். காரை தர்ஷனின் நண்பர் அந்தோணி தாஸ் ஓட்டிச் சென்றார். மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர்கள் இரவில் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் பெங்களூருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மைசூரு அருகே இன்கல் பகுதியில் வந்த போது நடிகர் தர்ஷன் வந்த கார் சாலைதடுப்பில் இருந்த மின்கம்பம் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் நடிகர்கள் தர்ஷன், தேவராஜ், பிரஜ்வல் தேவராஜ், அந்தோணி தாஸ் உள்பட 4 பேரும் காயமடைந்தனர். இதில் தர்ஷனுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தேவராஜுக்கு இடது கையில் 2 விரல்களிலும், அந்தோணி தாசுக்கு தோள்பட்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த 4 பேரும் மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நடிகர் தர்ஷன், தேவராஜ், அந்தோணி தாஸ் ஆகியோருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
வீடு திரும்பினார்
இந்த விபத்து குறித்து வி.வி.புரம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே நடிகர்கள் தேவராஜ், பிரஜ்வெல் தேவராஜ் ஆகியோர் சிகிச்சை முடிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பே வீடு திரும்பினர். நடிகர் தர்ஷன், அந்தோணி தாஸ் ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நடிகர் தர்ஷன் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவர் கார் மூலம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார். அவரை பார்ப்பதற்காக மருத்துவமனையில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
இரண்டு மாதங்கள் ஓய்வு
முன்னதாக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த நடிகர் தர்ஷன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விபத்து நடந்த நாள் மைசூருவில் சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு ஓட்டலில் சாப்பிட்டோம். அதன் பிறகு பெங்களூருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எங்கள் கார் மோதியதில் மின்கம்பம் சேதமடையவில்லை. ஏற்கனவே ஏதோ ஒரு வாகனம் மோதியதில் அந்த மின்கம்பம் சேதமடைந்திருந்தது. காரில் நான், நடிகர்கள் தேவராஜ், பிரஜ்வல் தேவராஜ், அந்தோணி தாஸ் உள்பட 5 பேர் சென்றோம். காரில் 6 பேர் பயணித்ததாகவும், காரை நானே ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாகவும் சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. இது தவறான தகவல். இதனால் நான் மனவேதனை அடைந்துள்ளேன்.
கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன். ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதனால் வீட்டில் ஓய்வு எடுக்க உள்ளேன். அதன் பிறகு படப்பிடிப்புகளில் கலந்துகொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story