வள்ளியூரில் டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்பு கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
வள்ளியூரில் டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்பை, மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
நெல்லை,
வள்ளியூரில் டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்பை, மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
பயிற்சி வகுப்பு
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் எம்.எஸ். மண்டபத்தில் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை ஏற்பாட்டில் டி.என்.பி.எஸ்.சி. இலவச கையேடு வழங்கும் விழா மற்றும் ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஷில்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் ஷில்பா பேசியதாவது:-
வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள், இந்த பயிற்சி வகுப்பினை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இங்கு திறமை வாய்ந்த மற்றும் அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடுமையான முயற்சி
மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு கடுமையான முயற்சியையும், புத்திசாலிதனத்தையும் பயன்படுத்த வேண்டும். எந்த பாடத்தை எடுத்தாலும் அதை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுக்கு தனியாக ஒரு அட்டவணை தயார் செய்து படிக்க வேண்டும்.
இந்த பகுதியில் அதிக அளவு திறமையான மாணவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் சிறந்த முறையில் படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும். மிகவும் பின்தங்கிய பகுதியான ராதாபுரம் தொகுதி பகுதி மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி வழங்கும் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்பதுரை எம்.எல்.ஏ. பேச்சு
விழாவில் இன்பதுரை எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் மனிதவளம் மேம்பட வேண்டும். ராதாபுரம் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறேன். மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சார வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது ஒரு சட்டமன்ற உறுப்பினரின் கடமை. அதை நான் சரிவர செய்து வருகிறேன்.
ஒரு தொகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் வேலை வாய்ப்பு பெற்றால் தான், அந்த தொகுதி முன்னேற்றம் அடையும், அதன் அடிப்படையில் இங்கு மாணவ-மாணவிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே நான் கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவ -மாணவிகளுக்கு இலவச வினா-விடை புத்தகங்களை வழங்கினேன். இந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவர்கள் நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரிகளாக வர வேண்டும். இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் எனது ஆசையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலவச கையேடு
தொடர்ந்து பயிற்சி வகுப்பு நடந்தது. கோவை யுனைடெட் ஆப் டெக்னாலஜி மெக்கானிக்கல் பிரிவு தலைவர் ஆனந்த பார்த்திபன், சுனில் குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாலை 4 மணிக்கு பயிற்சி முடிந்தது. முடிவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ரூ.500 மதிப்பில் டி.என்.பி.எஸ்.சி. கையேடு வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் சிவோகா மனிதவள மேம்பாட்டு நிறுவன தலைவர் லட்சுமி காந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story