தஞ்சை பெரியகோவில்: புராதன சிலைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு
தஞ்சை பெரியகோவிலில் புராதன சிலைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
தஞ்சை பெரியகோவிலில் உள்ள புராதன சிலைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்தோம். இந்த ஆய்வு தொடரும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறினார்.
தஞ்சை பெரியகோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 50 பேர் கொண்ட குழுவினர் 3 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு முடிந்து வெளியே வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேலிடம் எதற்காக ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.
இந்த ஆய்வு குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை பெரியகோவிலில் ஏற்கனவே பல சிலைகள் மாயமாகியுள்ளது குறித்தும், சிலைகள் மாற்றப்பட்டுள்ளது தொடர்பாகவும் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியகோவிலில் உள்ள புராதன சிலைகளில் மாறுதல் ஏதும் செய்யப்பட்டுள்ளதா? எத்தனை சிலைகள் இருக்கின்றன? என்று கணக்கெடுப்பு நடத்தினோம்.
இந்த ஆய்வில் ஒரு சில விவரங்களை கண்டுபிடித்துள்ளோம். இந்த ஆய்வு தொடரும். சில சிலைகளில் புதிதாக தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விசாரணை நடத்தப்படும். குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. கோர்ட்டு நமக்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது. விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story