இறால் பண்ணைகளில் வேதிப்பொருளை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
இறால் பண்ணைகளில் வேதிப்பொருளை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் வீரராகவராவ் அறிவுறுத்தினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் சார்பில் இறால் பண்ணைகளில் நோய் எதிர்ப்பு வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்து பேசியதாவது:–
மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலே முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. அந்த வகையில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 298 எக்டேர் பரப்பளவில் 123 இறால் பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 1,138 டன் இறால் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி மூலம் சுமார் ரூ.14 கோடியே 55 லட்சம் வருவாய் கிடைக்கிறது. இறால் உற்பத்தியில் தமிழ்நாடு அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 4–வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் சில பண்ணைகளில் இறால் வளர்ச்சிக்காக குளோரோ பெனிகால், குளோரோபார்ம், நியோமையினஸ், நேட்ரோயூரான்ஸ் போன்ற தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதன் மூலம் வளரும் இறால் வகைகளை உட்கொள்வதனால் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவே இறால் வளர்ப்பில் இதுபோன்ற வேதிப்பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானிடாம் வர்கீஸ், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், மீன்வள உதவி இயக்குனர் (வடக்கு) அப்துல் காதர் ஜெயிலானி, சென்னை ஏற்றுமதி ஆய்வு நிறுவனம் ஜனநேசன், உணவுப்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் அழகர், கடல்சார் நீர்வாழ் உயிரின ஆணையம் பிரியா, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு கடல் உணவு ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.