கண்டலேறு அணையில் இருந்து திறப்பு: பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 70 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது
கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் நேற்று பூண்டி ஏரியை வந்தடைந்தது. ஏரிக்கு வினாடிக்கு 70 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
செங்குன்றம்,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு ஆண்டு தோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு மார்ச் மாதம் 26-ந் தேதி நிறுத்தப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் 2.253 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது.
தண்ணீர் திறப்பு
2-வது கட்டமாக ஜூலை மாதத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனால் போதிய இருப்பு இல்லாததால் தண்ணீர் திறக்க இயலாது என்று ஆந்திர அதிகாரிகள் கைவிரித்தனர்.
இந்த நிலையில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணைக்கு தண்ணீர் வழங்கும் ஸ்ரீசைலம் அணை முழுவதுமாக நிரம்பியதால் உபரிநீரை கிருஷ்ணா நதியில் நீரை திறந்து விட்டனர். இந்த தண்ணீர் சோமசீலா அணை வழியாக கண்டலேறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி ஏரியை வந்தடைந்தது
இதனால் கண்டலேறு அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதனையடுத்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதினர். அதன்படி கடந்த 22-ந் தேதி காலை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் 350 கனஅடியாக அதிகரித்தனர்.
இந்த நீர் நேற்று முன்தினம் தமிழக எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது. இந்த தண்ணீர் அங்கு இருந்து 25 கி.மீ பாய்ந்து நேற்று அதிகாலை பூண்டி ஏரியை வந்தடைந்தது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 70 கனஅடி வீதம் தண்ணீீர் வந்து கொண்டிருக்கிறது.
வினாடிக்கு 1,200 கனஅடி
கண்டலேறு அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை முதல் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு நேற்று காலை முதல் வினாடிக்கு 352 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரியில் 19 மில்லியன் கனஅடி தண்ணிீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story