சேலம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி


சேலம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 30 Sept 2018 5:00 AM IST (Updated: 30 Sept 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே மீன்பிடிக்க சென்றபோது கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொண்டலாம்பட்டி,

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே தாசநாயக்கன்பட்டி சவுடாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் மனோஜ் (வயது 14). இவன் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். தாசநாயக்கன்பட்டி ராம்நகரை சேர்ந்த சீனிவாசன் மகன் சஞ்சய் (12). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

நண்பர்களான சஞ்சய் மற்றும் மனோஜ் ஆகிய 2 பேரும் தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் வீட்டை விட்டு வெளியே சென்று விளையாடினர். பின்னர் மாலை 4 மணியளவில் வீட்டில் யாருக்கும் தெரியாமல் மனோஜ் மொபட்டில் சஞ்சயை அழைத்துக்கொண்டு, கொண்டலாம்பட்டி அருகே ஊத்துகுளிக்காடு என்ற இடத்தில் உள்ள கல்குவாரி குட்டைக்கு சென்றனர்.

அங்கு மாணவர்கள் மொபட்டை நிறுத்திவிட்டு கல்குவாரியில் இறங்கி தூண்டில் மூலம் மீன்பிடிக்க தொடங்கினர். அப்போது அவர்களில் ஒருவன் எதிர்பாராதவிதமாக குட்டையில் தவறி விழுந்து விட்டான். இதையடுத்து அவன் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என சத்தம் போட்டான். இதனால் மற்றொரு மாணவன் நண்பனை காப்பாற்ற உள்ளே குதித்தான். ஆனால் 2 பேருக்கும் நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. நீண்டநேரம் தத்தளித்த அவர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

இதைப்பார்த்து அங்கு மீன்பிடித்து கொண்டு இருந்த மற்ற சிறுவர்கள் ஓடிவந்து பார்த்து 2 பேர் குட்டையில் மூழ்கி விட்டதாகவும், அவர்களை காப்பாற்றுங்கள் எனவும் சத்தம் போட்டனர். இந்த சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடோடி வந்து குவாரியில் எட்டி பார்த்தனர். ஆனால் மாணவர்களின் உடல் தெரியவில்லை.

இதுகுறித்து அவர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்பு தீயணைப்பு வீரர்கள் மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் மாணவர்களை பிணமாக தான் அவர்களால் மீட்க முடிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து மாணவர்களின் உடலை பார்த்து அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலத்தில் மீன்பிடிக்க சென்றபோது கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Next Story