திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் போலி லேபிள் தயாரித்து பனியன் ஆடைகளை விற்பனை செய்தவர் கைது
திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் போலி லேபிள் தயாரித்து பனியன் ஆடைகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 44). இவர் அப்பகுதியில் பெண்களுக்கான லெக்கீன்ஸ் ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் தயாரிக்கும் லெக்கீன்ஸ் ஆடைகளில் சிறிய பழுது இருந்தால் அவற்றை செகண்ட்ஸ் குடோனுக்கு அவர் விற்பனை செய்துள்ளார். அந்த குடோனில் இருந்து திருப்பூர் பல்லடம் ரோடு சின்னவர் தோட்டத்தை சேர்ந்த முகமது ரபீக்(39) என்பவர் லெக்கீன்ஸ் ஆடைகளை பெற்று விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் முகமது ரபீக், கோபாலகிருஷ்ணன் நிறுவனத்தின் பெயரில் போலியாக பனியன் லேபிள் தயாரித்து லெக்கீன்ஸ் ஆடைகளை உற்பத்தி செய்து கடைகளுக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், முகமது ரபீக் போலியாக லேபிள் தயாரித்து லெக்கீன்ஸ் ஆடைகளை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. மேலும் கடந்த 15 நாட்களாக அவர் இதுபோல் லெக்கீன்ஸ் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து முகமது ரபீக்கை கைது செய்து அவரிடம் இருந்து போலி லேபிள்கள், 200 லெக்கீன்ஸ் ஆடைகள், லேபிள்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.