சபரிமலை கோவிலுக்கு பெண்கள் அனுமதி: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு


சபரிமலை கோவிலுக்கு பெண்கள் அனுமதி: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு
x
தினத்தந்தி 30 Sept 2018 4:00 AM IST (Updated: 30 Sept 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட அய்யப்ப பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்,

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பு குறித்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யப்ப பக்தர்களிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:–

அகில பாரத அய்யப்ப சேவா சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் அகத்தீஸ்வரன் (கொடைக்கானல்):– சபரிமலைக்கு ஆண்களையும், 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்பது பாரம்பரிய முறை ஆகும். சபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களையும் அனுமதிப்பது குறித்து தற்போது சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பால், அய்யப்ப பக்தர்களின் மனம் நொந்து போய் உள்ளது. நான் கடந்த 52 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருகிறேன். தற்போது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பால், இனி தொடர்ந்து சபரிமலைக்கு செல்ல வேண்டுமா? என்று யோசிக்கிறேன்.

தேவசம்போர்டு முயற்சி எடுத்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஆண்களை மட்டும் அனுமதிக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக கேரளாவில் கனமழையால் பெரும் அழிவு ஏற்பட்டது. இதற்கு அய்யப்பனின் கோபம் தான் காரணம். சுப்ரீம் கோர்ட்டு தற்போது அளித்துள்ள தீர்ப்பால் மேலும் பல அழிவுகள் நடக்க நேரிடும். கடவுள் மீது நம்பிக்கை உள்ள பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர மாட்டார்கள். இந்த தீர்ப்பால், வழக்கு போட்டவர்களும், மற்ற மதத்தினரும் சபரிமலைக்கு வர முயற்சிப்பார்கள். அதற்கான பலனை அவர்களே அனுபவிக்க வேண்டும்.

அகில பாரத அய்யப்ப சேவா சங்க மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி (திண்டுக்கல்):– அய்யப்பன் தன்னுடைய 12 வயதிலேயே சபரிமலைக்கு தவம் இருக்க சென்றவர். அவர் மீது பெண்களின் பார்வையே படக்கூடாது என்பது தான் அவருடைய விருப்பம். பெண்கள் தன்னை தரிசிக்கக்கூடாது என தான் எழுதிய ஏட்டுச்சுவடியில் அய்யப்பன் குறிப்பிட்டுள்ளார். 10 வயதுக்கு கீழ் மற்றும் 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் சபரிமலைக்கு வருவதையே நாங்கள் எதிர்க்கிறோம். இதனால் தற்போது சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசிடம் கருத்து கேட்கப்பட்ட பின்னரே இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் உள்ள ஆளும் அரசு பெண்களின் வாக்கு வங்கியை மனதில் வைத்தே செயல்படுகின்றனர். வருகிற 3–ந்தேதி அகில இந்திய காரியகமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். சபரிமலைக்கான விதியை நிர்ணயம் செய்வது தந்திரி தான்.

இதனால் ஆண்கள் மட்டுமே சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்ற முறையை கொண்டுவர வேண்டும். ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பையும், மற்ற நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பையும் கூறியுள்ளார்கள். அவர்கள் சபரிமலையை பற்றிய வரலாறு தெரியாதவர்கள். நீதிபதிகள் சபரிமலைக்கு நேரில் வந்து ஆய்வு செய்திருந்தால் இந்த தீர்ப்பை வழங்கி இருக்க மாட்டார்கள். இந்த தீர்ப்பை அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story