சபரிமலை கோவிலுக்கு பெண்கள் அனுமதி: பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி - நடிகர் சத்யராஜ்
சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்தது பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.
திண்டுக்கல்,
திராவிடர் கழகம் சார்பில் ‘பெரியார் பிஞ்சுகள்’ என்ற தலைப்பில் நேற்று மாலை திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாநாடு நடந்தது. இதில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். முன்னதாக, நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
குழந்தைகளிடம் பெற்றோர்கள் தங்களது கருத்தை திணிக்காதீர்கள். அனைத்து மதம், சாதி, இனம் ஆகியவற்றின் ஒரே நோக்கம் மகிழ்ச்சி மட்டும் தான். ஆனால், மூட நம்பிக்கைகள் மகிழ்ச்சியை கெடுக்கிறது. மூட நம்பிக்கைகளுக்கு காவலாக மதம் உருவாக்கப்பட்டது. மதத்துக்கு காவலாக கடவுள் இருக்கிறார்.
விஞ்ஞான வளர்ச்சிதான் மனிதனுக்கு தேவையான மின்சாரம், கணினி, செல்போன் போன்ற வசதிகளை பெற்றுக்கொடுத்தது. இவற்றுக்கு அடிப்படை பகுத்தறிவு. மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்ததற்கு காரணம், அறிவியல்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை கருவி போன்றவை தான்.
நான் நாத்திகனாக இருப்பதாலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை போல அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற மேடைகளில் பேசி வருகிறேன். என்னை நாத்திகனாக படைத்த கடவுளுக்கு நன்றி. முன்னணி நடிகர்கள் சிலருடைய பிறந்த தேதியின் கூட்டுத்தொகை 9 வருவதால், சினிமா கலைஞர்களுக்கு உகந்த எண் 9 என்று கூறுகிறார்கள். ஆனால், கூட்டுத்தொகை 9 எண்ணை கொண்ட பல கலைஞர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லையெனில், தனிமனிதனும் மகிழ்ச்சியாக இருக்கமாட்டான். எவ்வளவு பணம் கொடுத்தாலும் பெற்ற தாயை வாங்க முடியாது என்கிறார்கள், உண்மைதான். ஆனால், பெற்ற தாய் உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பணம் தேவைப்படுகிறது.
அந்த பணத்தை பெற கல்வி, வேலைவாய்ப்பு அவசியம். அதற்கு, ஏன், எதற்கு, எப்படி? போன்ற கேள்வி ஞானம், பகுத்தறிவு மிகவும் அவசியம். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.