தேனியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.37 லட்சம் மோசடி; 11 பேர் மீது வழக்கு


தேனியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.37 லட்சம் மோசடி; 11 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Sept 2018 3:45 AM IST (Updated: 30 Sept 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி ரூ.37 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி,

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக ராஜா (வயது 44) பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் பெரியகுளம் அருகே உள்ள முதலக்கம்பட்டி வரதராஜ்நகரை சேர்ந்த கருப்பையா மகன் லட்சுமணன், கண்டமனூரை சேர்ந்த பொன்னையா மகன் தங்கபாண்டியன் ஆகியோர் சேர்ந்து பொக்லைன் எந்திரத்துக்கான வாகன கடனாக ரூ.14 லட்சத்து 24 ஆயிரம் பெற்றுள்ளனர். இதில் 9 தவணைகள் மட்டும் பணம் செலுத்துவிட்டு மீதம் ரூ.12 லட்சத்து 64 ஆயிரத்து 431 செலுத்தாமல் இருந்துள்ளனர்.

அதேபோல், தங்கபாண்டியனும், முதலக்கம்பட்டி வைகைபுதூரை சேர்ந்த கருத்தக்கண்ணன் மகன் கருப்பசாமியும் சேர்ந்து ரூ.13 லட்சத்து 68 ஆயிரம் வாகன கடன் வாங்கி உள்ளனர். இதில் 10 தவணைகள் மட்டும் செலுத்துவிட்டு, மீதம் ரூ.12 லட்சத்து 39 ஆயிரத்து 880 செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தங்கபாண்டியனும் குமணன்தொழு பொன்னம்படுகையை சேர்ந்த சின்னத்துரை மகன் பாலமுருகனும் சேர்ந்து அதே நிதி நிறுவனத்தில் வாகன கடனாக ரூ.13 லட்சத்து 14 ஆயிரம் பெற்றுள்ளனர். இதற்கு 10 தவணைகள் மட்டும் பணம் செலுத்திவிட்டு மீதம் ரூ.12 லட்சத்து 12 ஆயிரத்து 935 திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளனர்.

இந்த கடன் பெறுவதற்கு சிலர் ஜாமீன் கையெழுத்து போட்டு இருந்தனர். பணத்தை திருப்பி செலுத்த சொன்னபோது அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கூட்டுச் சதி செய்து மோசடி செய்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிளை மேலாளர் ராஜா புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையை தொடர்ந்து மொத்தம் ரூ.37 லட்சத்து 17 ஆயிரத்து 246 மோசடி செய்யப்பட்டது தொடர்பாக லட்சுமணன், அவருடைய மனைவி அழகுசித்ரா, கருப்பசாமி, பாலமுருகன், தங்கபாண்டியன் உள்பட மொத்தம் 11 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story