ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலி: முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் ஏராளமானோர் அஞ்சலி


ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலி: முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் ஏராளமானோர் அஞ்சலி
x
தினத்தந்தி 30 Sept 2018 5:30 AM IST (Updated: 30 Sept 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான விபத்தில் நேற்று முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மும்பை,

ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான விபத்தில் நேற்று முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முதலாம் ஆண்டு நினைவு தினம்

மும்பை பிரபாதேவி ரெயில்நிலைய குறுகிய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலம் இடிந்து விழப்போவதாக பரவிய வதந்தியை அடுத்து பயணிகள் முண்டியடித்து கொண்டு வெளியேற முயற்சி செய்தபோது இந்த சோக சம்பவம் நடந்தது.

இந்த சம்பவத்தை அடுத்து மும்பையில் உள்ள பல ரெயில் நிலையங்களில் புதிய நடைமேம்பாலங்கள் கட்டப்பட்டன. தொடர்ந்து பல இடங்களில் குறுகிய நடைமேம்பாலங்கள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் பிரபாதேவி ரெயில் நிலைய விபத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலி

இதையொட்டி விபத்தில் பலியானவர்களுக்கு பிரபாதேவி ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் தவிர ராகுல் செவாலே எம்.பி., காங்கிரஸ் பிரமுகர் சச்சின் சாவந்த் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், போலீசாரும் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், ‘இனிமேல் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாத வகையில் ரெயில் நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை ரெயில்வே நிர்வாகம் மேம்படுத்த வேண்டும்’ என்றார்.

Next Story