தொடர் மழை எதிரொலி: சோத்துப்பாறை அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
தொடர் மழை எதிரொலியால், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் 9 கி.மீ. தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மூலம் தாமரைக்குளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் ஆகிய கிராமங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோத்துப்பாறை அணை நிரம்பி வழிந்தது. அதன்பிறகு போதிய அளவு மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக பெரியகுளம் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 121.28 அடியாக (மொத்த உயரம் 126.2) காணப்பட்டது. மேலும் அணைக்கு வினாடிக்கு 36 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணை விரைவில் நிரம்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 3 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், வராக நதியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அணை நிரம்பும் போது வராக நதியில் தண்ணீர் திறக்கப்படும். இதனால் வராகநதி கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தண்டோரோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மஞ்சளாறு வடிநில கோட்ட உதவிசெயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் கூறும்போது, ‘அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வராகநதியில் தண்ணீர் திறக்கப்படும். எனவே வராகநதியின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நதியில் குளிக்கவோ, துவைக்கவோ வேண்டாம்’ என்றார்.
போடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொட்டக்குடி, குரங்கணி, காரிப்பட்டி, முட்டம், முதுவர்குடி ஆகிய மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன்காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் அருவிபோல் விழுகிறது. இதையொட்டி அந்த தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.