மேல்மலையனூர் அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதல்; 4 பேர் பலி


மேல்மலையனூர் அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதல்; 4 பேர் பலி
x
தினத்தந்தி 30 Sept 2018 4:30 AM IST (Updated: 30 Sept 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதியதில் தொழில் அதிபர் உள்பட 4 பேர் பலியானார்கள்.

மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி முல்லைநகரை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன்(வயது 38). தொழில் அதிபரான இவர், செஞ்சியில் உரதொழிற்சாலையும், இருசக்கர வாகன ஷோரூமும் நடத்தி வந்தார். இந்த நிலையில் லட்சுமிநாராயணனின் உறவினரான பொன்பத்தி கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் தங்கபாண்டியன்(24) என்பவர் சட்டக்கல்லூரியில் கல்வி பயில ஆசைபட்டார்.

எனவே அவரது ஆசையை நிறைவேற்றுவது குறித்து லட்சுமிநாராயணன், தனது சக நண்பர்களிடம் கூறினார். அப்போது வக்கீல்கள், ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படிக்க வைக்கலாம் என்று கூறி உள்ளனர்.

இந்த கல்லூரியில் நேரில் சென்று விண்ணப்பிக்க லட்சுமிநாராயணன் முடிவு செய்தார். அதன்படி அவர், தனது நண்பர்கள் 6 பேர் மற்றும் தங்கபாண்டியனை அழைத்துக்கொண்டு நேற்று காலை 10.30 மணிக்கு காரில் சித்தூர் நோக்கி புறப்பட்டார். இந்த காரை செஞ்சி ஷேக் உசேன் தெருவை சேர்ந்த நிஜாமுதீன்(30) என்பவர் ஓட்டினார்.

விழுப்புரம்–ஆற்காடு சாலையில் மேல்மலையனூர் அருகே தேவனூர் என்ற இடத்தில் கார் சென்றுகொண்டிருந்தது. தேவனூரை சேர்ந்த கிருஷ்ணன்(60), அவரது மனைவி லலிதா(55) ஆகிய இருவரும் சைக்கிளில் தேவனூரில் இருந்து வளத்தி நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

தேவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சென்றபோது, அந்த வழியாக தொழில் அதிபர் லட்சுமிநாராயணனின் கார் வந்தது. சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக கார் டிரைவர் பிரேக் போட்டார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளியமரத்தில் வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த கோரவிபத்தில் லட்சுமிநாராயணன், நிஜாமுதீன், செஞ்சி அருகே உள்ள அஞ்சாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த வக்கீல் சக்திவேல்(58) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்ற 6 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினார்கள்.

உடனே தேவனூர் கிராம மக்கள், விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க முயன்றனர். ஆனால் காரின் கதவை அவர்களால் திறக்க முடியவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் வளத்தி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அத்தியூர் கிராமத்தை சேர்ந்த வக்கீல் அதிமூலம்(45) மற்றும் வேட்டைகாரன்பட்டி வக்கீல் சின்னதுரை(38), கடலி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, செஞ்சி பீரங்கிமேடு சின்னையா என்கிற வீரப்பன்(36), தங்கபாண்டியன், ரங்கபாண்டியன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஆதிமூலம் மட்டும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே ஆதிமூலம் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் விபத்துக்குள்ளான கார், கிரேன் மூலம் மீட்கப்பட்டு வளத்தி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோர விபத்தில் பலியான 4 பேரும் பா.ம.க.வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் செஞ்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story