மனஅழுத்தம் இன்றி பணியாற்றுவது குறித்து மகளிர் போலீசாருக்கு பயிற்சி சூப்பிரண்டு ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்


மனஅழுத்தம் இன்றி பணியாற்றுவது குறித்து மகளிர் போலீசாருக்கு பயிற்சி சூப்பிரண்டு ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 Sept 2018 4:54 AM IST (Updated: 30 Sept 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மன அழுத்தம் இன்றி பணியாற்றுவது குறித்து மகளிர் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பணியாற்றும் மகளிர் போலீசார், மன அழுத்தம் இன்றி பணியாற்றுவது தொடர்பான ஒருநாள் பயிற்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. பயிற்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு துணை சூப்பிரண்டு மகேந்திரன் முன்னிலை வகித்தார்.

இதில் குமரி மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மகளிர் போலீசார் கலந்து கொண்டனர்.

சான்றிதழ்

சுரக்‌ஷா என்ற மகளிர் அமைப்பு சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் நேர்மறையான சிந்தனை என்ற தலைப்பில் மும்பையை சேர்ந்த ராஜேந்திரன் சிவராமபிள்ளையும், மன அழுத்த மேலாண்மை குறித்து டாக்டர் சபரிதாவும், யோகா கலை குறித்து யோகா நிபுணர் கீதாவும், தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதை தடுப்பது எப்படி? என்பது குறித்து கிருஷ்ணா சுரேந்திரனும் பேசினர்.

மாலையில் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், சுரக்‌ஷா அமைப்பின் தலைவர் சாந்தா பாலகிருஷ்ணன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். முடிவில் சுரக்‌ஷா அமைப்பை சேர்ந்த உமா நன்றி கூறினார்.

Next Story