புதுவையில் சி.பா.ஆதித்தனாருக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும்; அரசுக்கு, அன்பழகன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்
புதுவையில் சி.பா. ஆதித்தனாருக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு, அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
‘தமிழர்தந்தை’ என மரியாதையுடனும், அன்போடும் போற்றப்படும் ‘தினத்தந்தி’ நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 114–வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புதுவை அரசு சார்பில் சிறப்பு செய்ய வேண்டியது நமது கடமையாகும். அடித்தட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அன்றாட நாட்டு நடப்புகள், அரசியல் செய்திகளை எளிய நடைமுறையில் ‘தினத்தந்தி’ நாளிதழ் மூலமாக கொண்டு சென்றவர் போற்றுதலுக்குரிய சி.பா.ஆதித்தனார் ஆவார்.
பாமர மக்களுக்கும் செய்திகளை படிக்கும் ஆவலை தூண்டியவர் சி.பா. ஆதித்தனார். எளிய பேச்சு நடையை எழுத்து மூலம் பத்திரிகை வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றவர். அவர் தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும், சட்டத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
சி.பா.ஆதித்தனாரின் போற்றுதலுக்குரிய செயல்களை பெருமைப்படுத்தும் விதமாக தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில், முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர்., வெண்கல சிலை அமைத்து கொடுத்தார். தமிழராக பிறந்து தமிழ் மக்களின் நலனுக்காக வாழ்ந்து மறைந்த சி.பா.ஆதித்தனாரின் நினைவைப் போற்றும் விதத்தில் தமிழ் மக்கள் வாழும் புதுச்சேரி மாநிலத்திலும் அவரது புகழுக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக தமிழக அரசை பின்பற்றி சி.பா.ஆதித்தனாருக்கு வெண்கல திருவுருவ சிலை, மணிமண்டபம் அல்லது நகர பகுதியில் முக்கிய சாலைக்கு அவரது பெயரை சூட்ட உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.