வாடகைக்கு கார் இயக்குவதை எதிர்த்தால் ஆட்டோ டிரைவர்களின் உரிமம் ரத்து - கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை
புதுச்சேரியில் பிரபல தனியார் நிறுவனங்கள் கார்களை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஆட்டோ டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என கவர்னர் கிரண்பெடி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னராக கிரண்பெடி பொதுமக்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் நேரில் சந்தித்து புகார் மனுக்களை அளிக்க நேரம் ஒதுக்கி உள்ளார். அதன்படி பொதுவான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவர்னரிடம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து உடனுக்குடன் கவர்னர் கிரண்பெடி அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செல்போன் செயலி மூலமாக பிரபல தனியார் நிறுவனங்கள் கார்களை வாடகைக்கு விட்டு வருகின்றன. அதுபோன்ற நடைமுறையை புதுவையில் அறிமுகப்படுத்துவதற்கு இங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து புதுவை கவர்னர் மாளிகையில் தனியார் கார் வாடகை டிரைவர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார். கவர்னரின் செயலர் தேவநீதிதாஸ், போலீஸ் டி.ஜி.பி.சுந்தரி நந்தா, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உள்பட 70–க்கும் மேற்பட்ட தனியார் கார் வாடகை டிரைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:–
பிரபல தனியார் நிறுவனங்கள் அரசின் உரிய அனுமதி பெற்று கார்களை இயக்குவதற்கு உரிமை உண்டு. இதன்மூலம் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வாகன சேவை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. வாடகை கார்களை இயக்கக்கூடாது என யாரேனும் தடுத்தாலோ அல்லது பயணிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தாலோ புகார் தெரிவிக்கலாம்.
இதற்காக கட்டணமில்லா தொலைபேசி இணைப்புகளில் தொடர்பு கொள்ளலாம். அதாவது புதுவை காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 100 மற்றும் 1031, 1073 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் 94892 05039 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம், அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். தனியார் கார் வாடகைக்கு ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.