தமிழகத்தில் மின்வெட்டு இல்லை: எதிர்க்கட்சியினர் அரசியலுக்காக குறை சொல்கிறார்கள், அமைச்சர் தங்கமணி பேட்டி
தமிழகத்தில் மின்வெட்டு இல்லை எனவும், எதிர்க்கட்சியினர் அரசியலுக்காக மின்வெட்டு என குறை சொல்லி வருவதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
தமிழக மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 7 லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஜனநாயக ரீதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். கலந்துகொள்வதும், கலந்துகொள்ளாததும் அவரவரின் விருப்பம்.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல் மின்நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் அலகுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. உடன்குடி அனல் மின்நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் இப்பணி நிறைவடையும். 4 ஆண்டுக்குள் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதலாக விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர் சண்முகத்திற்கு, உயர் அதிகாரிகள் விடுப்பு அளிக்காததால் விரக்தியடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உண்மை தன்மையை கேட்டறிய மாவட்ட கலெக்டர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் காரணமாக கடந்த ஒரு மாதமாக நிலக்கரி வரத்து குறைந்தது. அங்கு தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. இதனால் வழக்கமாக தினசரி வரும் அளவான 16 வேகன்கள் நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது. கையிருப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக தினமும் 20 வேகன்கள் வேண்டும் என கேட்டுள்ளோம்.
தமிழகத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இல்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் அரசியலுக்காக மின்வெட்டு என குறை சொல்லி வருகின்றனர். ஐகோர்ட்டில் மின்சார வாரியம் மூலம் அளித்த பதில் திருப்திகரமாக உள்ளது என நீதிபதி தெரிவித்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story