86 நாட்களுக்கு பிறகு தடை நீக்கம்: ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
86 நாட்களுக்கு பிறகு குளிக்க தடை நீங்கியதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
பென்னாகரம்,
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் சுற்றுலா தலமான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நடைபாதை, மெயின் அருவி, தொங்கு பாலம் உடைந்து சேதமடைந்ததால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. ஆனால் சேதமடைந்த மெயின் அருவி, சினிபால்ஸ், தொங்குபாலம் சீரமைக்கும் பணி நடைபெற்றதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்தது. ஒகேனக்கல்லில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி முடிவடைந்ததால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்தனர். இந்தநிலையில் 86 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை நேற்று மாவட்ட நிர்வாகம் நீக்கியது. அதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், விமலன், ஒகேனக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், ஊராட்சி செயலாளர் குமரன் ஆகியோர் மெயின் அருவி பகுதியில் சிறப்பு பூஜை செய்தனர்.
ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பரிசலில் சவாரி செய்தனர். அருவியில் குளிக்க தடை நீக்கப்பட்டதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் நேற்று ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகள், காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
இந்தநிலையில் கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story