மதுபோதையில் மோதி உடைத்த மின்கம்பத்துடன் 2 கிலோ மீட்டர் தூரம் லாரியை ஓட்டிவந்த டிரைவர்


மதுபோதையில் மோதி உடைத்த மின்கம்பத்துடன் 2 கிலோ மீட்டர் தூரம் லாரியை ஓட்டிவந்த டிரைவர்
x
தினத்தந்தி 30 Sept 2018 7:32 PM IST (Updated: 30 Sept 2018 7:32 PM IST)
t-max-icont-min-icon

மதுபோதையில் மோதி உடைத்த மின்கம்பத்துடன் 2 கிலோ மீட்டர் தூரம் டிரைவர் ஒருவர் லாரியை ஓட்டி வந்தார்.

சிவகிரி,

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கொளந்தபாளையம் கிராமம் ஈரோடு– கரூர் மாவட்ட எல்லையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை கோவையில் இருந்து நாமக்கல்லுக்கு 12 சக்கரங்கள் கொண்ட டாரஸ் லாரி சென்றுகொண்டு இருந்தது. செந்தில் (வயது 35) என்பவர் லாரியை ஓட்டினார். அதிக வேகத்தில் லாரி சென்றுகொண்டு இருந்தது.

இந்த நிலையில் கொளந்தபாளையம் வந்தபோது, லாரி செந்திலின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டு ஓரத்தில் வரிசையாக இருந்த 3 மின்கம்பங்கள் மீது மோதியது. இதில் 3 மின்கம்பங்களுமே உடைந்தன. இதில் ஒரு மின்கம்பம் லாரியின் முகப்பிலேயே விழுந்து தொங்கியது. மின்கம்பிகளும் லாரியின் கேபினுக்குள் சிக்கிக்கொண்டன.

ஆனால் லாரியை ஓட்டிய செந்தில் இதுபற்றி எதுவும் தெரியாதவர் போலவே லாரியை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தார். சிவகிரி அருகே உள்ள நல்லிசெல்லிபாளையம் என்ற இடத்தில் லாரி வந்தபோது, ரோட்டில் சென்ற பொதுமக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே வாகனங்களில் துரத்திச்சென்று லாரியை மறித்து நிறுத்தினார்கள்.

அப்போதுதான் டிரைவர் செந்திலுக்கு மின்கம்பத்தோடு லாரியை ஓட்டிவந்திருக்கிறோம் என்று தெரிந்தது. உடனே இதுகுறித்து கரூர் மாவட்டம் தென்னிலை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் போலீசாரும், மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். பின்னர் போலீசார் டிரைவர் செந்திலை விசாரித்தபோது அவர் மதுபோதையில் இருந்தது தெரிந்தது. அதனால் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்கள். மின்வாரிய பணியாளர்கள் உடைந்த மின்கம்பத்தையும், மின்கம்பிகளையும் மீட்டு கொளந்தபாளையத்துக்கு கொண்டு சென்றார்கள்.

விபத்து ஏற்பட்டதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. அதனால் மின்கம்பிகள் லாரியில் விழுந்தும் டிரைவர் செந்திலை மின்சாரம் தாக்கவில்லை. இதேபோல் மின்கம்பத்துடன் லாரி வந்த 2 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிக வாகன போக்குவரத்தோ, மக்கள் நடமாட்டமோ இல்லை. அதனால் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

உடைந்த மின்கம்பத்துடன் லாரி வேகமாக வந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.


Next Story