விருதுநகர் தனியார் விடுதியில் சூதாட்டம்; போலீஸ்காரர் உள்பட 5 பேர் கைது

விருதுநகரில் உள்ள் தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாடியதாக போலீஸ்காரர், ஆர்.டி.ஓ. வின்டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் புறவழிச்சாலையில் ஒரு தனியார் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சூலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் தலைமையில் போலீசார் அந்த விடுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது விடுதியில் உள்ள ஒரு அறையில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர். சூதாடியதாக விருதுநகரை சேர்ந்த கணேஷ்குமார் (வயது31), முருகன்(40), சுந்தர்ராஜன் (37) மற்றும் விடுதி உரிமையாளர் நந்தகுமார் (40), விடுதி மேலாளர் ராமானுஜம் (60) ஆகிய 5 பேரையும் ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் சூதாட்ட பணம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். ஆமத்தூர் போலீசார் இவர்கள் 5 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
கைதானவர்களில் சுந்தர்ராஜன் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார். முருகன் ஆர்.டி.ஓ.வின் டிரைவராவார்.






