பலத்த மழை எதிரொலி: 25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய்


பலத்த மழை எதிரொலி: 25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய்
x
தினத்தந்தி 1 Oct 2018 3:45 AM IST (Updated: 30 Sept 2018 11:43 PM IST)
t-max-icont-min-icon

பலத்த மழை எதிரொலியாக 25 ஆண்டுகளுக்கு பிறகு குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்நிலையில் நிலக்கோட்டை, குளத்துப்பட்டி, அச்சணம்பட்டி, சீத்தாபுரம் உள்ளிட்ட பகுதியில் நீண்டநாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இதனை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோன்று அருகே உள்ள சீத்தாபுரம் பாப்பாகுளம் கண்மாய்க்கும் மழை நீர் வந்தது. ஆனால் கண்மாய் மடை பகுதியில் குடிமராமத்து பணி நடைபெற்று வருவதால் சரியாக அந்த மடையை அடைக்கவில்லை. இதனால் மழை தண்ணீர் அதிகளவு வீணாகியது. இதைபார்த்த விவசாயிகள் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதையொட்டி உடனே பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி போட்டு வீணாக வெளியேறிய தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கண்மாய்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அனைத்து கண்மாய்களும் நிரம்பி விடும். இதனிடையே அனைத்து கண்மாய்களின் மடைகள் சரியாக அடைக்கப்பட்டு இருக்கிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களை பயன்படுத்தி கண்மாய்க்கரை மற்றும் இதர இடங்களில் மரக்கன்று நட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story