மத்திய பாதுகாப்பு படை முன்னாள் வீரர் திருட்டு வழக்கில் கைது
தர்மபுரியில் மத்திய பாதுகாப்பு படை முன்னாள் வீரர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி செந்தில் நகரை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 22). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 27-ந்தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
இதே போன்று தர்மபுரி எர்ரபையனஅள்ளியை சேர்ந்தவர் சண்முகம் மகன் சக்தி (42). கட்டிட மேஸ்திரியான இவர் சம்பவத்தன்று தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரிய வந்தது. இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் தர்மபுரி-அன்னசாகரம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது. அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த பழைய ஏலகிரியை சேர்ந்த திருமால் (வயது 32) என்பதும், கடந்த 2013-ம் ஆண்டு மத்திய பாதுகாப்பு படையில் பணியில் இருந்த திருமால் பல்வேறு புகார்களால் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.
மேலும் சொந்த ஊருக்கு வந்த அவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததும், மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்து உல்லாசமாக செலவு செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்த போலீசார் திருட்டு தொடர்பாக மத்திய பாதுகாப்பு படை முன்னாள் வீரர் திருமாலை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருமால் மீது ஏற்கனவே தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7-க்கும் மேற்பட்ட வாகன திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story