செங்கல் சூளை அதிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது
திருவள்ளூர் அருகே செங்கல் சூளை அதிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மேல்மணம்பேடு முத்துநகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 47). செங்கல் சூளை அதிபர். கடந்த 26–ந் தேதி கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் வெங்கட்ராமன் வீட்டில் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி கொன்றனர்.
இந்த கொலை தொடர்பாக வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில், துணை சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், முருகன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் வெங்கட்ராமன் கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேரும் திருவள்ளூர் அருகே உள்ள பண்ணூரில் பதுங்கி இருந்தது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் நேற்று அங்கு சென்று 8 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (32), தினேஷ் (24), வீரா (24), இளங்கோவன் (24), கவிக்குமார் (24), ஸ்டீபன்ராஜ் (24), இளமுருகன் (19), விக்ரம் (28) என தெரியவந்தது.
வெங்கட்ராமனை கொலை செய்தது குறித்து அவர்கள் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–
வெங்கட்ராமனின் அண்ணனான முன்னாள் ஊராட்சி தலைவர் தங்கராஜை முன்விரோதம் காரணமாக 2016–ம் ஆண்டு வெட்டி கொன்றோம். இந்த வழக்கில் கைதான நாங்கள் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தோம். ஊருக்குள் நாங்கள் வந்தால் கொலை செய்து விடுவேன் என எங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வெங்கட்ராமன் கூறி வந்தார். மேலும் எங்களின் நிலத்தை விற்கவும் அவர் தடையாக இருந்தார்.
வெங்கட்ராமன் உயிருடன் இருந்தால் எங்களின் உயிருக்கு ஆபத்து என கருதி அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி 26–ந் தேதி அவருடைய வீட்டில் புகுந்து அவரை வெட்டி கொன்றோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து கார், 2 மோட்டார் சைக்கிள்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தங்கராஜ் கொலை வழக்கில் ராஜேஷ், தினேஷ், வீரா ஆகியோர் மீது வழக்கு உள்ளது. மற்ற 5 பேரும் அவர்களின் நண்பர்கள் ஆவார்கள்.