தமிழகத்தின் நலன் கருதி அ.தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் - டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேச்சு
தமிழகத்தின் நலன் கருதி அ.தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
ஈரோடு,
இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சியின் சார்பில் அருந்ததியர் சமுதாய அரசியல் எழுச்சி மாநாடு ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழகத்தில் உள்ள அருந்ததிய சமுதாயத்தினர் ஒவ்வொருவரும் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் ஆதரவாக இருந்தார்கள். இன்று அம்மாவின் தொண்டர்கள் 90 சதவீதத்துக்கும் மேல் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தொடர்ந்து அவர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
சமுதாயத்தில் எந்த சாதி, மதத்தில் பிறந்தாலும் சரி, பணக்காரன், ஏழையாக இருந்தாலும் சரி படித்தவர்கள், படிக்காதவர்களாக இருந்தாலும் சரி நாம் அனைவரும் அண்ணன், தம்பிகள். நாம் அனைவரும் உறவினர்கள். நமக்குள் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது.
இனத்தால், செய்யும் தொழிலால் பாகுபாடு கிடையாது என்பதை உணர்த்தத்தான் தந்தை பெரியார் போராடினார். அப்படிப்பட்ட இந்த பூமியில் நான் பேசுவதை பாக்கியமாக கருதுகிறேன். சமூக நீதிக்கு எதிராக யாராவது முயற்சி செய்தால் அதை எதிர்த்து போராட திராவிட இயக்கத்தை சேர்ந்த நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து அதை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
நீட் தேர்வு மூலம் கடந்த ஆண்டு அனிதாவையும், இந்த ஆண்டு பிரதீபாவையும் இழந்தோம். நீட் என்ற கொடிய அரக்கனால் தான் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இன்றைக்கு ஆட்சி பொறுப்பிலே இருக்கின்ற முதல் –அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரை சேர்ந்த அமைச்சர்களும் யாரால் இன்றைக்கு நாம் பொறுப்பிலே இருக்கிறோம், யாரால் இன்று தமிழகத்தில் இந்த ஆட்சி இன்று தொடர்கிறது என்பதை எல்லாம் மறந்து விட்டு துரோக சிந்தனையுடன் ஏற்றி வைத்த ஏணியையே எட்டி உதைப்பவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களால் எப்படி சீர்திருத்தங்கள் மற்றும் நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்க முடியும் என்பதை நீங்கள் எண்ணி பாருங்கள். அதனால் தான் இந்த ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதற்காக அ.ம.மு.க. இன்று தமிழக மக்கள் சார்பாக போராடிக்கொண்டு இருக்கிறது.
அ.ம.மு.க. சார்பில் ஒரு கூட்டம் நடத்துவதற்கு கூட அனுமதி மறுத்து நாம் கோர்ட்டுக்கு சென்று அனுமதி பெற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி கூட தனியார் இடத்தில் மாநாடு நடத்தியதால் தான் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட ஆட்சியை அப்புறப்படுத்துவது நமது கடமை. தமிழகத்தின் நலன் கருதி நாம் இந்த அ.தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
இந்த ஆட்சி முடிவுக்கு வந்தால் தான் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறக்கும். அருந்ததியர் சமுதாய அரசியல் எழுச்சி மாநாட்டில் போடப்பட்டு உள்ள தீர்மானங்கள், அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.