ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும்போது நூதன மோசடி; பெங்களூரை சேர்ந்தவர் சிக்கினார்
ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது நூதன மோசடியில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த வாலிபர் போலீசில் சிக்கியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் வாலிபர் ஒருவர் வாடிக்கையாளர்களை ஏமாற்றி நூதன முறையில் பணமோசடி செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதாவது ஏ.டி.எம். மையங்களுக்கு செல்லும் அந்த மர்ம நபர் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதுபோல் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றுவிடுவாராம். அதாவது ஏ.டி.எம். மையத்துக்குள் செல்லும் அவர் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்யும்வரை பொறுமையாக காத்திருப்பாராம்.
ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்ததும், இந்த ஏ.டி.எம்.மில் பணம் வராது என்று கூறி வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி வெளியே அனுப்பிவிடுவாராம். அவர்கள் சென்றதும் இவர் ஏ.டி.எம்.மில் தனது செய்கையை தொடர்ந்து அதில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு மாயமாகிவிடுவாராம்.
இதேபோல் மூலக்குளம் அன்னை தெரசா நகரை சேர்ந்த சேவியர் கென்னடி என்பவரிடமும் ரூ.20 ஆயிரம் மோசடி செய்துள்ளார். பல்வேறு நபர்களிடம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் வரை அந்த மர்ம நபர் மோசடி செய்திருப்பதாக போலீசாருக்கு புகார்கள் கிடைத்துள்ளன.
இதைத்தொடர்ந்து போலீசார் ஏ.டி.எம். மையங்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் பிடியில் பெங்களூரை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.