நிதி அதிகாரம் உயர்வு தொடர்பாக மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை - கவர்னர் விளக்கம்
நிதி அதிகார உயர்வு தொடர்பாக மத்திய அரசு எந்த உத்தரவினையும் பிறப்பிக்கவில்லை என்று கவர்னர் கிரண்பெடி விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகுறித்து கவர்னரின் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் செலவினங்களுக்கு ஏற்ப நிதி அதிகாரத்தை உயர்த்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையே மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டதாக சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதுதொடர்பாக தவறான தகவல் பொதுமக்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக இந்த விளக்கம் தரப்படுகிறது.
நிதி அதிகாரம் தொடர்பாக அந்த கடிதத்தில் எனக்கு எந்தவித உத்தரவும், ஆணைகளும் பிறப்பிக்கப்படவில்லை. அந்த கடிதத்தில் நிதி அதிகாரம் தொடர்பாக விதி 13(3)ஐ பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கட்டாயப்படுத்தப்படவில்லை.
நிதி தொடர்பாக மக்களுக்கு சரியானவற்றை செய்யவும், முறைப்படுத்தவும் எனக்கு முழு பொறுப்பு உள்ளது. அந்த கடிதத்தில் கவர்னருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. நிதி தொடர்பாக சரியான முடிவுகளை எடுக்கவும், தகுதியானவற்றை செய்யவும் நான் எச்சரிக்கையுடன் செயல்படுகிறேன்.
நிதி அதிகாரம் தொடர்பாக எந்தவித கோரிக்கையும் அரசிடம் இருந்து எனக்கு வரவில்லை. அவ்வாறு கோரிக்கை வரும்போது அதற்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்கப்படும். பொதுமக்களின் பணத்தை பாதுகாக்கும் பொறுப்பினை சட்டப்படி நான் தொடர்ந்து செய்வேன். நிதி அதிகாரங்கள் பரவலாக்குவதை தேவைப்பட்டால் செய்யலாம். ஆனால் கட்டாயமில்லை.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.