நீர்வரத்து அதிகரிப்பால் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மணல் மூட்டைகள் சரிந்து விழுந்தன


நீர்வரத்து அதிகரிப்பால் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மணல் மூட்டைகள் சரிந்து விழுந்தன
x
தினத்தந்தி 30 Sep 2018 9:30 PM GMT (Updated: 30 Sep 2018 9:04 PM GMT)

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மணல் மூட்டைகள் நீர்வரத்து அதிகரித்ததால் சரிந்து விழுந்தன. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஜீயபுரம், 


திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி 9 மதகுகள் உடைந்து விழுந்தன. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கின. இதற்காக ஆற்றுக்குள் முதல் கட்டமாக மணல் மூட்டைகள் அடுக்கும் பணியும், அடுத்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து கொட்டும் பணியும் நடந்தது. இருப்பினும் தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை. பாறாங்கற்களின் இடைவெளி வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

இதனை தடுத்து நிறுத்துவதற்காக உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து விழுந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணல் மூட்டைகள் சரிந்து விழுந்ததை கண்டு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.

இது தொடர்பாக தொழிலாளி ஒருவர் கூறுகையில் ‘தண்ணீர் அதிகமாக வந்ததால் குறிப்பிட்ட இடத்தில் தண்ணீர் வேகமாக வெளியேறியது. மணல் மூட்டைகள் சரிந்து விழுந்த இடம் சுமார் 35 அடிக்கும்மேல் ஆழமான பகுதியாகும். அந்த இடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டியுள்ளது. காவிரியில் நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்த தண்ணீரை புள்ளம்பாடி, அய்யன், பெருவளை வாய்க்கால்களில் திறந்து விடுவதற்காக தேக்கியதால் தான் கொள்ளிடத்தில் தண்ணீர் அதிகரித்தது. இதனால் தான் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து விழுந்தன’ என்றார்.


Next Story