அனுமதியின்றி செயல்பட்ட கடைகளில் 100 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள்
நாகர்கோவிலில் அனுமதியின்றி வியாபாரம் நடத்திய 5 இறைச்சி கடைகளை அதிகாரிகள் சோதனை நடத்தி அகற்றினர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன.
நாகர்கோவில்,
நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் இறைச்சி கடைகள் அனுமதியின்றி செயல்படுவதாக புகார்கள் வந்தன. இது போன்ற இறைச்சி கடைகள் ரோட்டோரம் மற்றும் பொது இடங்களில் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே இதுதொடர்பாக சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சண்முகசுந்தரம், சிவதாணுபிள்ளை, நாகராஜன் மற்றும் பிரவீன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை நாகர்கோவில் முழுவதும் சோதனை நடத்தினர். அவர்களுடன் நகராட்சி அதிகாரிகள் பகவதிபெருமாள், மாதேவன்பிள்ளை மற்றும் ஜாண்ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினரும் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு, ஒழுகினசேரி, வடசேரி பஸ் நிலையம் பகுதி, புளியடி செல்லும் சாலை, ராஜாக்கமங்கலம் ரோடு, இடலாக்குடி, கணேசபுரம் சாலை, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, கேப் ரோடு, கே.பி. ரோடு, பீச்ரோடு, செட்டிகுளம், ராமன்புதூர் உள்பட நகரில் பல்வேறு இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது. நகராட்சி அனுமதியுடன் இறைச்சி கடைகள் செயல்படுகின்றனவா? கடைகளில் சுகாதாரம் இருக்கிறதா? என்றெல்லாம் சோதனை செய்தனர். மேலும், கடைகளில் இறைச்சி வெட்ட பயன்படுத்தப்படும் கத்திகள் மற்றும் மரக்கட்டைகள் சுத்தமாக இருக்கிறதா? என்றும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது ஒழுகினசேரியில் ஒரு இறைச்சி கடை அனுமதி பெறாமல் வியாபாரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த கடையை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அந்த கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ஆடு மற்றும் மாடு இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதே போல மேலும் 4 இறைச்சி கடைகள் அனுமதியில்லாமல் இயங்கியது தெரியவந்தது. அந்த கடைகளையும் அதிகாரிகள் அகற்றினர். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில் மொத்தம் 5 கடைகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்ற திடீர் ஆய்வு வாரந்தோறும் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story