சாமுண்டீஸ்வரி தொகுதியில் என்னை ராகு, கேது, சனி ஒன்று சேர்ந்து தோற்கடித்தன சித்தராமையா பேட்டி


சாமுண்டீஸ்வரி தொகுதியில் என்னை ராகு, கேது, சனி ஒன்று சேர்ந்து தோற்கடித்தன சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 30 Sep 2018 11:30 PM GMT (Updated: 30 Sep 2018 11:30 PM GMT)

சாமுண்டீஸ்வரி தொகுதியில் என்னை ராகு, கேது, சனி ஆகியவை ஒன்று சேர்ந்து தோற்கடித்துவிட்டன என்று சித்தராமையா கூறினார்.

மைசூரு, 

சாமுண்டீஸ்வரி தொகுதியில் என்னை ராகு, கேது, சனி ஆகியவை ஒன்று சேர்ந்து தோற்கடித்துவிட்டன என்று சித்தராமையா கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

மைசூரு தாலுகாவைச் சேர்ந்த வருணா தொகுதிக்கு உட்பட்ட ஒசக்கோட்டை கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வளர்ச்சித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா கலந்து கொண்டு 1,339 பயனாளிகளுக்கு ரூ.5.41 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

என் மீதான வெறுப்பால், விரோதத்தால் எல்லோரும் சேர்ந்து நான் செய்த நல்ல விஷயங்களை புரிந்து கொள்ளாமல் என்னை சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்கடித்து விட்டனர். அவர்கள் என் மீது கொண்ட பொறாமை என்ற நோய்க்கு மருந்து உண்டா?. நான் மீண்டும் முதல்-மந்திரி ஆகக்கூடாது என்பதற்காக எதிரிகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து என்னை தோற்கடித்து விட்டார்கள். ராகு, கேது, சனி எல்லாம் ஒன்று சேர்ந்து சாமுண்டீஸ்வரி தொகுதியில் என்னை தோற்கடித்துவிட்டன.

நான் மறக்க மாட்டேன்

வருணா தொகுதி எனக்கு அதிர்ஷ்டத்தை தேடித்தந்த தொகுதி ஆகும். முதல் முறையாக வருணா தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற போது எதிர்க்கட்சி தலைவர் ஆனேன். 2-வது முறையாக வருணா தொகுதியில் இருந்து வெற்றிபெற்று முதல்-மந்திரி ஆனேன். 3-வது முறையும் இங்கேயே போட்டி போட்டிருந்தால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆகியிருப்பேன்.

ஆனால் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுவேன் என்று அங்குள்ள மக்களுக்கு வாக்குறுதி அளித்து இருந்ததால், அங்கு போட்டியிட்டேன். நான் பாதாமி தொகுதிக்கு அதிக அளவில் பிரசாரத்திற்கு போகவில்லை. ஆனால் அங்குள்ள மக்கள் என்னை கைவிடவில்லை. எனக்கு ஆதரவு கொடுத்து என்னை அவர்கள் வெற்றிபெற வைத்தார்கள். அதேபோல் என்னை 2 முறை வெற்றிபெற வைத்த வருணா தொகுதி மக்கள், என் மகன் யதீந்திராவையும் வெற்றிபெற வைத்துள்ளனர். வருணா தொகுதி மக்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர்களை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன். வருணா தொகுதியை வளர்ச்சி அடைய வைப்பேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

விழாவில் துருவநாராயண் எம்.பி, யதீந்திரா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கனவு பலிக்காது

விழா முடிந்தபிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் கூட்டணி அரசுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. கூட்டணி அரசு பத்திரமாக இருக்கிறது. ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் பா.ஜனதாவினர் காட்டும் ஆசைகளுக்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் மயங்க மாட்டார்கள். மேலும் யாரும் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. கட்சியை விட்டு போகும் முயற்சியையும் யாரும் செய்யவில்லை.

இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளை முழுமையாகவும், சுமுகமாகவும் நிறைவு செய்யும். இந்த கூட்டணி ஆட்சியில் எந்தவொரு எம்.எல்.ஏ.வும் அதிருப்தியில் இல்லை. அதனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவினரின் கனவு பலிக்காது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

புகைப்பிடிப்பதை விட்டுவிட்டேன்

பின்னர் மானச கங்கோத்திரி செனட் பவனத்தில் நடந்த புற்றுநோய் பரிசோதனை முகாமை சித்தராமையா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், “புற்றுநோய் வந்தால் ஆரம்பத்திலேயே அதை குணப்படுத்திக் கொள்ள வேண்டும். கடைசி நேரத்தில் டாக்டர்களிடம் போனால் குணப்படுத்த முடியாது. சிகரெட் பாக்கெட்டுகள் மீது ‘புகைப்பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ என்று எழுதி உள்ளது. ஆனால் அதை பார்த்துவிட்டே சிலர் புகைப்பிடிக்கிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி இருக்கிறார்கள். அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நானும் இளம் வயதில் சிகரெட் பிடித்தவன்தான். ஒருநாளைக்கு 40 சிகரெட்டுகள் புகைத்து மகிழ்ந்தவன்தான். ஆனால் அதன் தாக்கம் குறித்து அறிந்த பிறகு அதைவிட்டுவிட்டேன். அதாவது கடந்த 1987-ம் ஆண்டு முதல் நான் புகைப்பிடிப்பதை விட்டுவிட்டேன்” என்று கூறினார்.

சித்தராமையா உறுதி

இந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த மாணவ-மாணவிகள் மைசூரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. அவற்றை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட சித்தராமையா அவற்றை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து அவர் மைசூருவில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு அவரைக் காண ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்களைப் பார்த்து சித்தராமையா வணக்கம் தெரிவித்தார்.

Next Story