மீஞ்சூரில், தடுப்பு சுவரில் லாரி மோதி கன்டெய்னர் பெட்டி சரிந்ததில் மின்கம்பம் சேதம்


மீஞ்சூரில், தடுப்பு சுவரில் லாரி மோதி கன்டெய்னர் பெட்டி சரிந்ததில் மின்கம்பம் சேதம்
x
தினத்தந்தி 1 Oct 2018 10:30 PM GMT (Updated: 1 Oct 2018 5:35 PM GMT)

மீஞ்சூரில், தடுப்பு சுவரில் கன்டெய்னர் லாரி மோதி கன்டெய்னர் பெட்டி சரிந்ததில் மின்கம்பம் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் 10 மணிநேரம் மின்சாரம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பரிதவித்தனர்.

மீஞ்சூர்,

பெங்களூருவில் இருந்து மீஞ்சூர் அருகே இலவம்பேடு பகுதியில் உள்ள தனியார் கன்டெய்னர் யார்டுக்கு அதிக எடை மற்றும் அகலமான அளவுகொண்ட எந்திரத்தை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது.

மீஞ்சூர்-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் முரளி நகர் அருகே உள்ள சிறுபாலத்தை கடந்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

இதில் கன்டெய்னர் பெட்டி சரிந்து சாலையோரம் இருந்த உயர்மின் அழுத்த மின்கம்பம் மீது சாய்ந்தது. இதில் அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து அருகில் இருந்த குறைந்த மின்அழுத்த இரும்பு மின்கம்பத்தில் சாய்ந்தது.

இதனால் இரண்டு மின்கம்பங்களிலும் இருந்த மின்வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் நள்ளிரவு 12 மணியில் இருந்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியே இருளில் மூழ்கியது. மேலும் சாலையை மறைத்தபடி கன்டெய்னர் பெட்டி சரிந்து கிடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர், கிளனர் காயமின்றி உயிர் தப்பினர்.

நேற்று காலையில் கிரேன் வரவழைக்கப்பட்டு சாலையில் சரிந்து கிடந்த கன்டெய்னர் பெட்டியை மீட்டு, லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

சுமார் 10 மணிநேரத்துக்கு பிறகு காலை 10 மணியளவில் அந்த பகுதியில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. மின்தடையால் இரவில் வீடுகளில் தூங்க முடியாமல் குழந்தைகள், முதியவர்கள் உள்பட பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Next Story