வாடிக்கையாளர்கள் பெயரில் கடன்: தனியார் வங்கியில் ரூ.3 கோடி மோசடி


வாடிக்கையாளர்கள் பெயரில் கடன்: தனியார் வங்கியில் ரூ.3 கோடி மோசடி
x
தினத்தந்தி 1 Oct 2018 9:45 PM GMT (Updated: 1 Oct 2018 5:49 PM GMT)

தனியார் வங்கி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு மூலம் ரூ.3 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக பெண் மேலாளர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல், 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சொக்கலிங்கம் உள்பட 7 பேர் நேற்று, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் ஒரு புகார் மனு அளித்தனர். இதுகுறித்து சொக்கலிங்கம் கூறும்போது, நான் காரைக்குடியில் சித்தமருத்துவ கிளனிக் நடத்தி வருகிறேன். இதற்காக எனது தோட்டத்தில் மூலிகை மரங்கள் மற்றும் செடிகளை வளர்த்து வருகிறேன்.

இந்தநிலையில், கடந்த ஆண்டு திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு தம்பதி என்னிடம் சிகிச்சைக்காக வந்தனர். அவர்கள் என்னுடைய தோட்டத்தையும் பார்வையிட்டனர். இதையடுத்து அந்த பெண், நான் திண்டுக்கல்லில் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிவதாகவும், மூலிகை தோட்டத்தை விரிவாக்கம் செய்ய கடன் வாங்கி தருவதாகவும் கூறினார். இதை உண்மை என்று நம்பிய நான், திண்டுக்கல்லில் உள்ள அந்த வங்கிக்கு சென்று பெண் மேலாளரை சந்தித்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன்.

இந்தநிலையில் எனக்கு ரூ.50 லட்சம் கடன் தருவதாக கூறி, முதல் கட்டமாக ரூ.6 லட்சத்தை அந்த மேலாளர் கொடுத்தார். இதையத்து பணம் வரவில்லை என்று கூறி காலம் தாழ்த்தி வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த நான் என்னுடைய வங்கி கணக்கை சரிபார்த்தபோது, ரூ.50 லட்சம் கடன் பெற்றிருப்பது தெரிய வந்தது. இதில் ரூ.6 லட்சத்தை மட்டும் எனக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகையை அந்த பெண் மேலாளர் மோசடி செய்துவிட்டார்.

இதேபோல் எங்கள் 7 பேரிடமும் சேர்த்து மொத்தம் ரூ.3 கோடி வரை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்துள்ளோம், என்றார். 

Next Story