பொன்னேரி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


பொன்னேரி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Oct 2018 9:45 PM GMT (Updated: 1 Oct 2018 6:33 PM GMT)

பொன்னேரி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொன்னேரி,

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 55 கிராம ஊராட்சிகளுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் இருந்து ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பொன்னேரி அருகே உள்ள மெதூர், காட்டாவூர், அரசூர், ஆவூர், பனப்பாக்கம், திருப்பாலைவனம், சிறுளப்பாக்கம், கோளூர், பழவேற்காடு, கோட்டைகுப்பம், லைட்அவுஸ்குப்பம் உள்பட பல்வேறு ஊராட்சிகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக சில மணிநேரங்கள் குறைந்த அழுத்த மின்சார வினியோகமும், அறிவிக்கப்படாத மின்வெட்டும் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மெதூரில் இருந்து ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீரை ஏற்ற மின்மோட்டார்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வது பாதிக்கப்பட்டு உள்ளதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதை கண்டித்தும், தங்களுக்கு குடிநீர் வழங்ககோரியும் பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனத்தில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை பொன்னேரி-பழவேற்காடு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குடிநீர் வடிகால் வாரிய கூட்டுகுடிநீர் திட்ட செயலாக்க உதவி செயற்பொறியாளர் அமலதீபன், உதவி பொறியாளர் பன்னீர், வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம், ஊராட்சி செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

குறைந்த அழுத்த மின்சாரம், மின்வெட்டு காரணமாக மின்மோட்டார்கள் இயக்க முடியாததால் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. எனவே மெதூரில் தனி டிரான்ஸ்பார்மர் அமைத்து தரக்கோரி மின்வாரிய அலுவலகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதற்கான நடவடிக்கையில் மின்வாரியம் ஈடுபட்டு உள்ளது.

எனவே சீரான முறையில் மின்சாரம் கிடைக்கப்பட்ட உடன் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு தடையின்றி வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story