இடிகரை பேரூராட்சியில் வரி உயர்வு; அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இடிகரை பேரூராட்சியில் வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இடிகரை,
கோவையை அடுத்த இடிகரை பேரூராட்சியில் சொத்துவரி, தண்ணீர் வரி, தொழில் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதை கண்டித்து இடிகரை பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. இடிகரை கழக செயலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், காங்கிரஸ் நகர தலைவர் சிவகுமார், ம.தி.மு.க. பேரூர் கழக செயலாளர் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சண்முகம், சவுந்திரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி பிரகாஷ், கொங்கு மக்கள் கட்சியை சேர்ந்த பழனிசாமி, நஞ்சப்பன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் இடிகரை பேரூராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்துவரி, தண்ணீர் வரி, தொழில் வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தினமும் உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து அனைத்து கட்சி நிர்வாகிகள் இடிகரை பேரூராட்சி அலுவலகம் சென்று சொத்து வரி உள்ளிட்ட வரிகளை குறைக்க வேண்டும் என்று மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. சார்பில் துரைசாமி, சுப்பையன், மணி, டி.பி.சுப்பிரமணியம், அறிவரசு, ஜோதிபாசு, லட்சுமணன், மாலதி, ரங்கநாயகி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.