ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு
x
தினத்தந்தி 2 Oct 2018 12:00 AM GMT (Updated: 1 Oct 2018 7:37 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மொடக்குறிச்சியில் மன்சூர் அலிகான் கூறினார்.

மொடக்குறிச்சி,

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் இரு கரைகளிலும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பனை மர விதைகள் நடும் விழா நடந்தது. விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பனை மர விதைகளை நட்டு வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் பொதுமக்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு முடிவை வரவேற்கிறேன். பிளாஸ்டிக்கிற்கு மாற்று ஏற்பாடு செய்து விற்பனை செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு வரிச்சலுகை அளிக்க வேண்டும். டாஸ்மாக் மதுவை தடை செய்ய வேண்டும். பனை மரத்தில் இருந்து பதனீரை உற்பத்தி செய்து, இயற்கையான முறையில் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது என முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார். ஆனால் தமிழகம் முழுவதும் மின் தடை ஏற்பட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக வேதாந்தா நிறுவனத்துக்கு 41 இடங்களில் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்து உள்ளது.

சேலம்– சென்னை இடையிலான 8 வழி பசுமை சாலை திட்டத்தை முழுமையாக எதிர்ப்பேன். இதேபோல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அளித்து உள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தேவையில்லாதது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story