சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை


சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 1 Oct 2018 9:45 PM GMT (Updated: 1 Oct 2018 7:47 PM GMT)

உடன்குடி அருகே சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

உடன்குடி, 


உடன்குடி அருகே நயினார்பத்தில் இருந்து அம்மன்புரம், சீர்காட்சி, பிச்சிவிளை வழியாக நாலுமூலைக்கிணறு வரையிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கியது. இதற்காக அங்கிருந்த பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கு சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டனர்.

இதனால் உடன்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் பரமன்குறிச்சி மற்றும் குலசேகரன்பட்டினம் வழியாக மாற்றுப்பாதைகளில் இயக்கப்படுகிறது. இதனால் நயினார்பத்து, அம்மன்புரம், சீர்காட்சி, பிச்சிவிளை ஆகிய கிராம மக்கள் பஸ் வசதியின்றி அவதிப்படுகின்றனர்.

எனவே புதிய சாலை அமைக்கும் பணியை விரைவில் நிறைவு செய்து, பஸ்களை வழக்கமான வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் உடன்குடி அருகே தைக்காவூர் விலக்கு அருகில் தனியார் பஸ்சை சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பஸ்சை சிறைபிடித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. 

Next Story