பெங்களூரு மாநகராட்சியில் என்ஜினீயர்களை விட தொழிலாளர்களே சிறப்பாக பணியாற்றுகிறார்கள்


பெங்களூரு மாநகராட்சியில் என்ஜினீயர்களை விட தொழிலாளர்களே சிறப்பாக பணியாற்றுகிறார்கள்
x
தினத்தந்தி 2 Oct 2018 4:00 AM IST (Updated: 2 Oct 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சியில் என்ஜினீயர்களை விட தொழிலாளர்களே சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்று மேயர் கங்காம்பிகா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் கடந்த மாதம்(செப்டம்பர்) 28-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கங்காம்பிகாவும், துணை மேயராக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ரமீளாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சி மேயராக கங்காம்பிகா நேற்று காலையில் பதவி ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலையில் சிறப்பு பூஜை செய்து அவர் வழிபட்டார். மேலும் தனது இருக்கையில் பசவண்ணரின் புகைப்படத்தை வைத்தும் கங்காம்பிகா பூஜை செய்தார். பின்னர் மேயர் கங்காம்பிகாவுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூச்செண்டுகளை கொடுத்தார்கள். அப்போது திடீரென்று எனக்கு அடிக்கடி பூச்செண்டுகளை கொடுக்க வேண்டாம், உங்கள் பணிகளை சரியாக செய்தாலே போதுமானது என்று அவர் கூரினார். பின்னர் மேயர் கங்காம்பிகா நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதனால் சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். சாலைகள் சீரமைக்கும் பணிகளை நானே நேரில் சென்று பார்வையிட உள்ளேன். குப்பை பிரச்சினையை தீர்ப்பதே எனது முதல் நோக்கமாகும். பெங்களூரு நகரை குப்பைகள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

நகரில் நிலவும் குப்பை பிரச்சினையை தீர்க்க புதிய டெண்டர் விடப்படும். மேலும் புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன். மாநகராட்சியில் பணியாற்றும் என்ஜினீயர்கள் சிறப்பாக பணியாற்றுவதாக சான்றிதழ்களை மட்டும் பெறுகிறார்கள். ஆனால் என்ஜினீயர்களை விட மற்ற தொழிலாளர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். தொழிலாளர்களை போல மற்ற அதிகாரிகளும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு மேயர் கங்காம்பிகா கூறினார்.
1 More update

Next Story