கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Oct 2018 9:45 PM GMT (Updated: 1 Oct 2018 8:15 PM GMT)

சீரான குடிநீர் வழங்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

நெல்லை, 


நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் 36-வது வார்டு அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த பெண்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சி தொகுதி செயலாளர் சலீம்தீன் தலைமையில் காலிக்குடங்களுடன் கொக்கிரகுளத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாத மாநகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதே நேரத்தில் மற்ற பல்வேறு அமைப்பினரும் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்துரை பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், மேலப்பாளையம் 36-வது வார்டு அம்மன் கோவில் வடக்கு தெருவில் கடந்த ஒரு ஆண்டாக வீட்டு குடிநீர் இணைப்பில் தண்ணீர் வரவில்லை. தெரு நல்லியில் தான் குடிநீர் பிடித்து வருகிறோம். அதிலும் சரியாக தண்ணீர் வருவதில்லை. லாரியில் வருகின்ற தண்ணீரை ஒரு சிலர் பிடிக்கிறார்கள். இதனால் அங்கு மோதல் ஏற்படுகிறது. எனவே எங்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லை அருகே உள்ள தருவையில் உள்ள காட்டுநாயக்கர் சமுதாய மக்கள், தாங்கள் செய்கின்ற தொழிலான காடை, கவுதாலி பிடிக்க பயன்படுத்துகின்ற வலை, கூண்டு மற்றும் குடுகுடுப்பையுடனும் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தங்களுக்கு, சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என்று மனு கொடுத்தனர். மனு கொடுக்க வந்த அவர்கள் அனைவரும் உள்ளே சென்று கலெக்டரையும், உதவி கலெக்டரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள். இதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஆலங்குளம் அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட காளாத்திமடத்தை சேர்ந்த சோனாசலம், வீரப்பன் என்ற மதி, சொள்ளமாடன் ஆகிய 3 தொழிலாளர்கள் மண் சரிந்து விழுந்து இறந்தனர். முருக பிரபாகர் படுகாயம் அடைந்தார். அவர்களுடைய குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று மனு கொடுத்தனர்.

நெல்லை டவுன் பாட்டப்பத்து தேவிபுரம் தெரு மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், தங்கள் சமுதாயத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும், குலதெய்வம் கோவிலுக்கும், விவசாய நிலத்திற்கும் செல்கின்ற பாதையில் உள்ள ரெயில்வே கேட்டை மூடி வைத்து உள்ளனர். அதை திறந்து விடவேண்டும் என்று கூறி உள்ளனர்.

பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி காமராஜர் நகரில், பொது நூலகம் அமைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள உடையார்பட்டிகுளத்திற்கு தண்ணீர் வருகின்ற கால்வாய்கள் தூர்ந்து போயிவிட்டன. அந்த குளம் மழை பெய்வதால் மட்டுமே நிரம்பும், வீடுகளின் கழிவு நீர் அங்கே தேங்கி கிடப்பதால் நோய் ஏற்படுகிறது. எனவே அந்த குளத்தை மூடி பஸ்நிலையம் அமைக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.நெல்லையில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாறிய பொதுமக்கள், முகவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து தங்களுடைய முகத்தை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தங்களுடைய பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் தங்களுக்கு சம்பளம் மற்றும் நிலுவை தொகையை வழங்கவேண்டும் என்று மனு கொடுத்தனர். கடையம் அருகே உள்ள சபரிநகரை சேர்ந்த வின்சென்ட் என்பவர் குடும்பத்தோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களை கொத்தடிமையாக நடத்தும் செங்கல் சூளை அதிபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு கொடுத்தார்.

புளியங்குடி அருகே உள்ள திருவேட்டநல்லூரை சேர்ந்த மனோகரன் குடும்பத்தோடு, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனது தந்தை பணியில் இருந்தபோது இறந்ததால் அவர் பணியாற்றிய சத்துணவு அமைப்பாளர் பணியை வாரிசு அடிப்படையில் தனக்கு வழங்கவேண்டும் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சங்கரபாண்டியன் (மாநகர்), எஸ்.கே.எம்.சிவகுமார் (கிழக்கு), பழனிநாடார் (மேற்கு) ஆகியோர் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக அரசு சொத்துவரி, வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரிகள் பல மடங்கு உயர்த்தி உள்ளது. இந்த வரிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி கிராமத்தில் பொதுபாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என்று கூறி அந்த ஊர்மக்கள் மனு கொடுத்தனர். 

Next Story