மதுரை அருகே விபத்து; லாரி மீது கார் மோதல், 2 பேர் பலி
மதுரை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொட்டாம்பட்டி,
சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுல்தான் மைதீன்(வயது 58). அவருடைய மருமகள் சுனைதா. இவர் பிரசவத்திற்காக மதுரையில் உள்ள தாயார் வீட்டிற்கு வந்தார். இந்தநிலையில் சுனைதாவுக்கு குழந்தை பிறந்தது.
எனவே சுனைதாவின் கணவர் தீன் நேற்று முன்தினம் மதுரைக்கு வந்துவிட்டார். மருமகள் மற்றும் பேரக்குழந்தையை பார்ப்பதற்கு சுல்தான் மைதீன், அவருடைய மனைவி மரியம்கனி மற்றும் உறவினர்கள், குழந்தைகள் என 8 பேர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து காரில் மதுரைக்கு புறப்பட்டனர்.
காரை சுல்தான் மைதீன் ஓட்டினார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை அடுத்த பாண்டாங்குடி விலக்கு பகுதியில் நேற்று காலையில் அந்த கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரியின் பின்னால் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கி பலத்த சேதம் அடைந்தது.
இதில் சுல்தான் மைதீன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரின் இடிபாடுகளில் சிக்கி அவரது குடும்பத்தினர் மரியம்கனி, பாத்திமுத்து, மீரா, அசார், ஜமீனா(6) உள்பட 7 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரினுள் சிக்கி இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ஜமீனா இறந்தாள்.
காயம் அடைந்த மரியம்கனி, பாத்திமுத்து, மீரா, அசார் உள்பட 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.