புகார்களில் சிக்கிய 3 வக்கீல்கள் கோர்ட்டுகளில் வாதாட இடைக்கால தடை; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
புகார்களில் சிக்கிய 3 வக்கீல்கள் கோர்ட்டுகளில் வாதாட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘நத்தம் கருப்பன்னபிள்ளை தெருவைச் சேர்ந்த சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனது கடையை மீட்டு தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
கோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் பதவியில் இருந்து வக்கீல் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் 2016–ல் நீக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அதன் பேரில் இவர் மீதான நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வக்கீல் என்ற போர்வையில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளார். இது சம்பந்தமாக அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு உள்ளது. கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாகத்தான் மனுதாரரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு அவருக்கு சொந்தமான இடத்திலேயே சட்ட அலுவலகம் நடத்தி வந்துள்ளார். எனவே மனுதாரருக்கு சொந்தமான இடத்தை வக்கீலிடம் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீட்டு கொடுக்க வேண்டும்.
வக்கீல் என்ற போர்வையில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும், வக்கீல்கள் சரவணக்குமார், சுப்பிரமணி ஆகியோர் மீதும் மனுதாரர் தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சிலில் புகார் அளித்துள்ளார்.
எனவே இந்த வழக்கில் அகில இந்திய பார் கவுன்சிலை கோர்ட்டு தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்து, கீழ்கண்ட உத்தரவை பிறப்பிக்கிறது.
அதாவது, தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை 2 மாதத்தில் முடித்து வைக்க வேண்டும். வக்கீல்கள் சரவணக்குமார், சுப்பிரமணி ஆகியோர் மீது தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அவர்கள் 3 பேரும் சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் கீழ்கோர்ட்டுகளில் ஆஜராகி வாதாடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
இந்த உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அகில இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வருகிற 22–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.